திருவள்ளுவரின் திருக்குறள்

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.



கண்களின் உள்ளே காதலர் இருப்பதால் கண்களுக்கு மை எழுதுவதில்லை மறைத்துவிடும் என்பதை அறிந்து.



எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.



என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.



காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.


My love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide.


As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.



kaNNuLLaar kaadha lavaraakak kaNNum
ezhudhaem karappaakku aRindhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பாலில் தேன் கலந்தது போல் முத்தம் தித்திக்கும். உடலும் உயிரும் கலந்தது போல் கலந்த அவள் கண்மணியின் கருவிழியை கடந்து நெற்றியிலும் நிறைகிறாள். வாழ்தலுக்கான உயிராக இருந்து காக்கிறாள். அவளை மறக்கவே இல்லை எனவே நினப்பதும் இல்லை. அவரோ கண்ணை விட்டு விலகுவது இல்லை, மை கொண்டு மறைக்கவும் இயலவில்லை, நெஞ்சில் நிலைப்பதால் வெப்பமான உணவு உட்கொள்ளவில்லை. கண்ணையும் இமைக்காமல் அவரை காப்பதால் அன்பற்றவராக இந்த மனிதர்கள் அவரை நினைக்கிறார்கள். அவரோ என் உள்ளத்தில் நீங்காமல் இருக்கிறார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.