திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பேதைமை / Folly

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.



மடமை என்பது என்ன என்றால் சிறு துன்பத்துக்கு அஞ்சி நற்பயனை நழுவ விடுவது.



பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.



அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.



கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.


Familiarity What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim!.


Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.



paedhaimai enpadhondru yaadhenin EdhangoNdu
oodhiyam poaka vidal

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.



மடமையானவற்றில் முதன்மையானது தனக்கு பொருந்தாத செயல்களை செய்ய விரும்புவது.



ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.



அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.



தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.


'Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove.


The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.



paedhaimaiyuL ellaam paedhaimai kaadhanmai
kaiyalla than-kat seyal

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.



வெட்கப்படாமை, வேட்கையோடு தேடாமை, இனிமையாக இல்லாமை, எந்த ஒன்றையும் பாதுகாக்காமை, போன்றவைகள் பேதையின் தொழிலாகும்.



தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.



தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.



வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.


Ashamed of nothing, searching nothing out, of loveless heart,
Nought cherishing, 'tis thus the fool will play his part.


Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.



naaNaamai naadaamai naarinmai yaadhondrum
paeNaamai paedhai thozhil

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.



புரிந்துக் கொள்ளும் அளவிற்கு படித்து நன்கு உணர்ந்து பிறருக்கு எடுத்துரைத்து அதன்படி நடக்காத பேதையைப் போல் வேறோரு பேதை இல்லை.



நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.



படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.



படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.


The sacred law he reads and learns, to other men expounds,-
Himself obeys not; where can greater fool be found? .


There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.



Odhi uNarndhum piRarkkuraiththum thaanatangaap
paedhaiyin paedhaiyaar il

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.



பேதையின் தன்னிச்சையான ஒரு செயல் அடுத்தடுத்து துன்ப நரகத்தில் அழுத்தும்.



எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.



அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.



தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.


The fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth.


A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.



orumaich cheyalaatrum paedhai ezhumaiyum
thaanpuk kazhundhum aLaRu

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.



அர்தமற்ற ஒன்றோ சரியாக அமையும்?, நுட்பம் அறியாத பேதை செயல்பட மேற்கொண்டால். ( பேதை தேவையற்றதையும் செய்ய முடியாது)



ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.



செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.



நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.


When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.


If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.



poipadum ondroa punaipooNum kaiyaRiyaap
paedhai vinaimaeR koLin

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.



தொடர்பற்றவர்கள் பயனடைவார்கள் உறவினர்கள் பசித்திருப்பார்கள் பேதைக்கு பெருஞ் செல்வம் வாய்ப்பதால்.



பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.



அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.



அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.


When fools are blessed with fortune's bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.


If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.



Edhilaar aarath thamarpasippar paedhai
perunjelvam utrak kadai

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.



பித்து பிடித்த ஒருவன் கள் உண்டதைப் போல், பேதை தனக்கு உடமையாக ஒன்றை பெற்றால் மாறிடுவான்.



பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.



அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.



நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.


When folly's hand grasps wealth's increase, 'twill be
As when a mad man raves in drunken glee.


A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.



maiyal oruvan kaLiththatraal paedhaidhan
kaiyondru udaimai peRin

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.



பெரியது இனிமையானது பேதைகளின் நட்பு காரணம் அவர்களின் பிரிவு துன்பம் ஒன்றும் தராது.



பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.



அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.



அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.


Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.


The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.



peridhinidhu paedhaiyaar kaeNmai pirivin-kaN
peezhai tharuvadhon Ril

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.



கழுவாத கால்களுடன் படுக்கைக்குச் செல்வதைப் போன்றது சான்றோர் கூட்டத்திற்குப் பேதைச் செல்வது.



சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.



சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.



அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.


Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet.


The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.



kazhaaakkaal paLLiyuL vaiththatraal saandroar
kuzhaaaththup paedhai pugal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அடைய வேண்டியதை அலட்சியத்தால் தவறவிடுவது பேதைமை. தனக்கு பொருந்தாததை செய்வதே பேதைமையில் முதன்மை. வெட்கப்படுதல், வேட்கையுடன் தேடல், இனிமையாக இருத்தல், பாதுகாத்தல் என இப்பண்புகள் இல்லாததே பேதைமை. பேதைகளின் பிரிவு துன்பம் தராது. கழுவாத கால்களுடன் படுக்க போவதைப் போன்றது அறிஞர் கூட்டத்திற்கு பேதை போவது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.