திருவள்ளுவரின் திருக்குறள்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.



நயம்பட பேசியவர்க்கு ஒப்புக் கொள்ளாமல் உடன்பட்டுப் போனேன் எனவே பசலை படர்ந்ததை பிறர்க்கு எப்படி உரைப்பேன்.



விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?.



என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?.



என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?.


I willed my lover absent should remain;
Of pining's sickly hue to whom shall I complain?.


I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.



nayandhavarkku nalkaamai naerndhaen pasandhaven
panpiyaarkku uraikko pira

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.



அவர் தந்தார் என்பதால் இவரைப் போல் என் மேனிமேல் ஊர்ந்து பரவுகிறது பசப்பு.



அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.



இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.



பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!.


'He gave': this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes.


Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.



avardhandhaar ennum thakaiyaal ivardhandhaen
maenimael oorum pasappu

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.



அழகையும் வடிவையும் அவர் கொண்டார் கைம்மாறாக நோயும் பசலையும் தந்து.



காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.



அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.



காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.


Of comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left.


He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.



saayalum naanum avarkondaar kaimmaaraa
noayum pasalaiyum thandhu

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.



நினைத்துக் கொண்டே இருக்கிறேன் மற்றபடி அவரது திறத்தை உரைத்துக் கொண்டு இருக்கிறேன் இருப்பினும் கள்ளத்தனமாகவோ பிற வழியிலோ பசலையும் வந்தது.



யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.



நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.



யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?.


I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.


I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.



ulluvan manyaan uraippadhu avardhiramaal
kallam piravo pasappu

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.



அப்பக்கம் காதலர் பிரிந்து செல்வார் இப்பக்கம் எனது மேனியில் பசலையும் வந்தது.



அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.



முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.



என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.


My lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home.


Just as my lover departed then, did not sallowness spread here on my person ?.



uvakkaan-em kaadhalar selvaar ivakkaan-en
maeni pasappoor vadhu

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.



விளக்கை அகற்றியதும் பரவ பார்க்கும் இருளைப் போல் கணவன் முயக்கம் அகற்றியதும் பரவ பார்க்கும் பசப்பு.



விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.



விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.



விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.


As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace.


Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.



vilakkatram paarkkum irulepoal kon-kan
muyakkatram paarkkum pasappu

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.



கூடிக்கிடந்தேன் கொஞ்சம் விலகினேன் அதற்குள்ளாகவே அள்ளிக் கொண்டது பசப்பு.



தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.



முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.



தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!.


I lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me.


I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.



pullik kidandhen pudaipeyarndhaen avvalavil
allikkol vatre pasappu

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.



பசலை இவளுக்கு படர்ந்தது என்பதைத் தவிர இவளை காதலன் துறந்தார் என்று சொல்பவர் இல்லை.



இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!.



இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.



இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.


On me, because I pine, they cast a slur;
But no one says, 'He first deserted her.'.


Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".



pasandhaal ival-enpadhu allaal ivalaith
thurandhaar avar-enpaar il

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.



உடலில் பசலை படர்ந்து எப்பாடு பட்டால் என்ன நயமாக பேசி பிரிந்தவர் நல்ல நிலை உடையவர் என்றால்.



பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.



இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.



பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.


Well! let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain!.


If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.



pasakkaman pattaangen maeni nayappiththaar
nannilaiyar aavar enin

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.



பசலை படர்ந்தவள் என்று பெயர் பெறுதல் நன்றே நயமாக பேசி பிரிந்தவர் வாக்கு மாறியவன் என தூற்றார் என்றால்.



பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.



என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.



என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!.


'Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain.


It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).



pasappenap paerperudhal nandre nayappiththaar
nalkaamai thootraar enin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நயம்பட பேசி உடன்படாத என்னை ஒப்புக்கொள்ள செய்தார் என்பதால் என் பசலையை யாரிடமும் சொல்ல முடியவில்லை. பசலையோ அவரைப் போல் என்னில் பரவுகிறது. என் அழகையும் நாணத்தை அவர் பெற்றுக்கொண்டு நோயும் பசலையும் எனக்கு தந்தார். அவரது திறத்தை எண்ணியபடி இருப்பினும் பசப்பு வருகிறதே. அவர் என்னை பிரியும் பொழுதே பசப்பு தொற்றுகிறதே. விளக்கை அகற்ற இருல் பரவுவது போல் அவர் முயக்கம் முடிந்ததும் பசலை பரவுகிறது. பசலை படந்தது என்றே கூறுகின்றார் காதலன் பிரிந்தான் என கூறுவது இல்லை. எப்படியோ அவர் நன்றாக இருந்தால் போதும். (பசலை என்பது பிரிவு தாங்கமல் தோலில் ஏற்படும் மாற்றம்)


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.