திருவள்ளுவரின் திருக்குறள்

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.



கவனிக்கப்படாதவரை கவனிக்கச் செய்யும் பொருள் போன்றது இல்லை பொருள்.



ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.



தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.



மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.


Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.


Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.



poruLal lavaraip poruLaakach cheyyum
poruLalladhu illai poruL

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.



ஏதும் அற்றவரை எல்லாரும் எள்ளுவார்கள். செல்வம் மட்டுமே உள்ளவரை எல்லாரும் சிறப்பு செய்வார்கள்.



பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.



பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.



பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.


Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.


All despise the poor; (but) all praise the rich.



illaarai ellaarum eLLuvar selvarai
ellaarum seyvar siRappu

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.



பொருள் என்ற மாறுபாடு இல்லாத புரிதல் இருளை அகற்றும் எண்ணிய துறைகள் சென்று.



பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.



பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.



பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.


Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.


The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).



poruLennum poiyaa viLakkam iruLarukkum
eNNiya thaeyaththuch chendru

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.



அறம் என்ற இல்வாழ்க்கை உண்டாகும், இன்பமும் உண்டாகும், தனது திறனை அறிந்து யாருக்கும் தீங்கு இல்லாமல் தேடிய பொருள்.



சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.



நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.



தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.


Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.


The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.



aran-eenum inpamum eenum thiRanaRindhu
theedhindri vandha poruL

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.



இயற்கையின் விருப்பமான அருளொடும், தீங்கு தராத அன்பொடும் கிடைக்காத பொருளின் ஆக்கத்தை முட்டாள்களே ஆள்வதற்கு விட்டுவிட வேண்டும்.



அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.



பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.



பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.


Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.


(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.



aruLodum anpodum vaaraap poruLaakkam
pullaar puraLa vidal

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.



உள்ள பொருளும் உருவாக்கும் பொருளும் தன் மாற்றார் இடத்தில் பெற்ற பொருளும் அரசுக்கு சொந்தமான பொருள்.



இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.



வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.



வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.


Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
The spoils of slaughtered foes; these are the royal revenues.


Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.



uRuporuLum ulku poruLumdhan onnaarth
theRuporuLum vaendhan poruL

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.



அருள் என்ற அன்பின் குழந்தை பொருள் என்ற செல்வச் செவிலியால் உண்டாகும். அருள் அன்பால் பிறந்து பொருளால் வளர்க்கப்படும்



அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.



அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.



அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.


'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.


The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.



aruLennum anpeen kuzhavi poruLennum
selvach cheviliyaal uNdu

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.



குன்றின் மேல் நின்று யானையின் சண்டையை காண்பதைப் போன்று ஆபத்தில்லாதது தன் உழைப்பால் தான்உயரச் செய்யும் செயல்.



தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.



தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.



தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.


As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand.


An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.



kundRaeRi yaanaippoar kaNtatraal than-kaiththondru
uNtaakach cheyvaan vinai

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.



பொருள்களை அடையவேண்டும். காரணம், பகைவரின் பகை உணர்வை அழிக்கும் ஆயுதம் வேறு இல்லை.



ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.



எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.



பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.


Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.


Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.



seyka poruLaich cheRunhar serukkaRukkum
eqkadhaniR kooriya thil

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.



வேண்டிய பொருளை விரும்பியபடி அடைந்தவருக்கு எல்லா பொருளும், அறமும், இன்பமும் உடன் இசைந்து இருக்கும்.



சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.



நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.



அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.


Who plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained.


To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition).



oNporuL kaazhppa iyatriyaarkku eNporuL
Enai iraNdum orungu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஒன்றுமற்ற ஒருவரை மதிக்கச் செய்யும் பொருளே பொருள் இது இல்லை என்றால் யாரும் மதிப்பது இல்லை. இருள் அகற்றும் பொருள் இன்பமும் அறமும் திறமும் வளர்க்கும். அருள் என்ற அன்பின் குழைந்தையை பொருளே வளர்க்கும். குன்றின் மேல் நின்று யானையின் சண்டையை காண்பதைப் போல் தனக்கு பாதகமின்றி பொருளை அடைந்தால் அறமும் இன்பமும் இசைந்து இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.