திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: துறவு / Renunciation

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.



எதுவென்று எதுவென்று அறிந்து விலக்கியவன் வருத்தப்படுவது அதனால் அதனிடத்தில் இல்லை.



ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.



எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.



ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.


From whatever, aye, whatever, man gets free,
From what, aye, from that, no more of pain hath he!.


Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.



yaadhanin yaadhanin neengiyaan noadhal
adhanin adhanin ilan

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.



வேண்டியது (தேவையானது) கிடைக்க துறக்க வேண்டும் துறந்தப் பின்பு இயல்பால் பலப்பல அடையாலாம்.



துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.



பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.



ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.


'Renunciation' made- ev'n here true pleasures men acquire;
'Renounce' while time is yet, if to those pleasures you aspire.


After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).



vaeNtin-un daakath thuRakka thuRandhapin
eeNtuiyaR paala pala

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.



வெற்றிக் கொள்ளவேண்டும் புலன்கள் ஐந்தையும், விட்டொழிக்க வேண்டும் தேவையானவை ஒன்றாக கிடைக்க.



ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.



ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.



ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.


'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire.


Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.



atalvaendum aindhan pulaththai vitalvaeNdum
vaeNtiya vellaam orungu

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.



இயல்பான நோன்பு என்பது ஒன்றும் இல்லாது இருத்தல், உடைமையாக கொண்டால் மயக்கமுற்று அடுத்ததை உடமையாக்க முற்படும்.



தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.



உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.



ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.


'Privation absolute' is penance true;
'Possession' brings bewilderment anew.


To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.



iyalpaakum noanpiRkondru inmai udaimai
mayalaakum matrum peyarththu

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.



அடுத்து தொடர்வதை யார் விரும்புவது? பிறவிக் கடக்க முற்பட்டவருக்கு உடம்பும் மிகையானதே.



பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.



இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.



பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.


To those who sev'rance seek from being's varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life?.


What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).



matrum thodarppaatu evan-kol piRappaRukkal
utraarkku udampum mikai

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்



நான் எனது என்ற ஆணவம் அழித்தவன் தேவர்களுக்கும் மேலான உலகத்தை அடைவான்.



உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.



உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.



யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.


Who kills conceit that utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine.


He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.



yaanena thennuGn serukkaRuppaan vaanoark
kuyarndha ulagam pukum

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.



பற்றி விடாது தொல்லைகள் பற்றினை பற்றி விடாத மனிதர்களுக்கு.



யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.



ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.



பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.


Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp.


Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.



patri vitaaa idumpaikaL patrinaip
patri vitaaa thavarkku

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.



தீர்க்கமாக ஆராய்ந்து தலைபட்டவரே துறந்தவர்,மற்றவர்கள் பயன் கருதி மயக்கத்தால் வலைபட்டவர்கள்.



முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.



ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.



அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.


Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.


Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.



thalaippattaar theerath thuRandhaar mayangi
valaippattaar matrai yavar

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.



(காட்சிகளை தன் விருப்பத்தில் காண்கிறோம் என்ற அனுபவம் பெரும் பொழுதே வள்ளுவரின் இக்குறள் எவ்வளவு ஆழமானது என்று புரியும்) ௯, பற்றுகளை துறந்த கண்ணே பிறப்பு அற்ற நிலையை உண்டாக்கும் மற்றபடி நிலையாமையே காணப்படும்.



இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.



ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.



பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.


When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability.


At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.



patratra kaNNae piRappaRukkum matru
nilaiyaamai kaaNap padum

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.



ஏற்றுக்கொள் எதிர்ப்பார்ப்பு அற்றவன் எதிர்ப்பார்ப்பை அப்படி ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள் எதிர்பார்ப்புகளை விடுவதற்கு.



பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.



ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.



எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.


Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
Cling to that bond, to get thee free from every clinging thing.


Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.



patruka patratraan patrinai appatraip
patruka patru vidaRku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எது எது என்று அறிந்து விலகியவர் அதனிடமிருந்து துன்பம் அடைவதே இல்லை. தேவைகள் சரியாக நடக்க துறவு அவசியம் துறவால் நன்மைகள் பலபல உண்டு. பார்வையிலேயே பற்று இல்லாமல் இருக்க வேண்டும் அப்படி இல்லாதவர் பற்று உள்ளவரே. பற்று இல்லாதவரைப் பற்றினால் பற்றை விடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.