ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: குருவழி

தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன்.


சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்.


குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்.


தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்.


நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம்.


நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.


நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம்.


ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல்
என்றுமொன் றாது சிவம்.


நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.


பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.



Meta Information:
குருவழி, திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural