ஔவையாரின் ஞானக்குறள்

எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி.


பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து.


கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.


பழத்தினிர தம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை.


தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது.


வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளே நிற்கு முணர்வு.


அச்சமாங் கார மகத்தடக்கி னாற்பின்னை
நிச்சயமா மீச னிலை.


மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு.


நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்க்குந் தானா மவன்.


ஓசையி னுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.



Meta Information:
உருவொன்றி நிற்றல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural