ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: பிறப்பறுதல்

தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு.


அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து.


சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து.


உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்.


நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது.


உடம்பிரண்டுங் கெட்டா லுறுபயனொன் றுண்டு
திடம்படு மீசன் றிறம்.


தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு.


மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம்.


விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு.


சிந்தையாங் காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு.



Meta Information:
பிறப்பறுதல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural