ஔவையார் அருளிய மூதுரை
கடவுள் வாழ்த்து:

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.



சொல் பலிதம் என்ற சரியாக கணித்தல், எல்லாரும் வாழவேண்டும் என்ற நல்ல மனம், அருள் வழங்கும் தெய்வத்தின் பார்வை, சோர்வு அடையாத உடல் என உண்டாகும் - மலர் கொண்டு துப்பாமல் நல் உடல் கொண்ட சுவாசம் வளர்த்தவர் பாதத்தை தவறவிடாமல் சாரும் அன்பர்களுக்கு.

நூல்:

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.



நன்றி ஒருவருக்கு செய்தோம் என்றால் அந்நன்றியை என்று தருவார் என்ற எண்ணம் வேண்டாம். ஓர் இடத்தில் இருந்தபடியே வளரும் தென்னை தான் தாளான வேரில் உண்ட நீரை தலையாலே தருவதால் உதவி பெற்றவர் என்றாவது உதவிடச் செய்வார்.

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.



நல்லவர் ஒருவருக்கு செய்த உதவி கல் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் நிலைத்திருக்கும். ஈரம் இல்லா நெஞ்சம் உடையவருக்கு செய்யப்பட்ட உதவியோ நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் நிலைக்காமல் உடனே அழியும்.

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.



துன்பமான இளமையில் வறுமையும் வந்துவிட்டால் துன்பத்தில் அளவால் இன்பமும் துன்பத்தரும். கொண்டாட்டமற்ற நாளில் பூத்த மலர் போலும் துணையற்ற மங்கையின் அழுகு போலும் மறைந்து போகும்.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.



சுண்ட காய்ச்சினாலும் பாலின் சுவை குன்றாது. அளவற்று நட்பு பாராட்டினாலும் நண்பராக இருக்க தகுதியற்றவர் நண்பராக மாட்டார். சீர்கெட்ட நிலையிலும் மேன்மையான மக்கள் மேன்மையானவர்களே. சங்கு சுட்ட போதிலும் வெண்மை நிறம் மாறாது.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.



தொடர்ந்து முயன்றாலும் முதிர்ச்சியுறும் நாள் வராமல் எடுத்த செயல்கள் முதிர்ச்சி அடையாது. கூட்டத்தோடு இருந்து உருவத்தால் நீண்டு உயர்ந்த மரங்கள் எல்லாம் உரிய பருவ காலம் இல்லாமல் பழுக்காது.

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான்.



தக்க சமயத்தில் தன் உயிரையும் வழங்கும் தன்மையுள்ளவர் நற்பண்புகளின் மேல் பற்று இல்லாதவரைக் கண்டு பணிவார்களா? - கற்றூண் பிளந்து நிற்க வைத்திருந்தாலும் பெரிய பாரத்தையும் தாங்குமே அன்றி தளர்ந்து வளையாது தானே.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.



நீர் எந்த அளவிற்க்கு தங்கி உள்ளதோ அந்த அளவிற்கே நீர் ஆம்பல் இருக்கும். ஒருவர் எவ்வளவு நூல் கற்றாரோ அந்த அளவே நுண் அறிவு இருக்கும். உயர் தவத்தின் அளவே ஒருவர் செல்வம் இருக்கும். பிறந்த குலத்தின் அளவே குணம் இருக்கும்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.



நல்லவரைக் காண்பதும் நன்மைத் தரும். நலனில் அக்கரைக் கொண்ட நல்லவர் சொல்லைக் கேட்பதுவும் நன்மைத் தரும். நல்லவரின் குணங்களைப் பற்றி எடுத்துரைப்பதும் நன்மைத் தரும். அவருடன் இணக்கமாக இருப்பதும் நன்மைத் தரும்.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.



தீயவரை பார்ப்பதும் தீமையானது, மனித மாண்பற்ற தீயவரின் சொல்லைக் கேட்பதும் தீமையானது. தீயவரின் குணத்தைப் பற்றி பேசுவதும் தீமையானது. அவருடன் இணங்கி இருப்பதும் தீமையே.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.



நெல் விளைந்திட இறைத்த நீர் வாய்க்கால் வழியாக ஓடி புல்லுக்கும் துணையாகிடும். பழைமையான இந்த உலகில் நல்லவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.



பயன்பாட்டிற்க்கு முளைப்பது அரிசியே என்றாலும் உமி நீங்கியதாக இருந்தால் முளைக்காதாம். படைப்பாற்றல் உள்ளவர்களுக்கும் எல்லைப் படுத்தப்படாமல் எடுத்தச் செயல் செய்ய மாட்டாது.

மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.



மடல் பெரிதாக இருக்கும் தாழை பூ மகிழம்பூ. வாசனையே இனிதாக இருக்கும் உடல் சிறியது என்று இருக்க வேண்டாம். கடல் பெரியது என்றாலும் உகந்த நீராகாது. கடல் அருகே சிறிய ஊற்று உகந்த நீராக இருந்துவிடும்.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.



தாங்கும் தன்மையுள்ள கவையாகவும், ஊன்றுகோலான கொம்பாகவும் மாறும் காட்டில் இருக்கும் அவைகள் நல்ல மரங்கள் இல்லை. அவையின் நடுவில் நின்று கொடுத்த ஏட்டை படிக்க முடியாமல் நின்று குறிப்பை அறிய முடியாதவனே நன்மரம்.

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.



அழகால் இடத்தை முற்றுகை இட்டு ஆடும் மயிலைக் கண்ட வான்கோழி தன்னையும் அதுவாகவே பாவித்து - தானும் தனது பொல்லாச் சிறகை விரித்து ஆடியது போலவே புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது. (கல்லாதவன் ஒரு கவியை கற்று உரைப்பது போன்றது).

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.



வரி கொண்ட வேங்கைப் புலியின் நோயை தீர்த்த இளம் வைத்தியர் அங்கேயே அதற்கு ஆகாரம் ஆனதைப் போல் - பண்பற்ற அற்ப அறிவுள்ளவர்களுக்கு செய்த உபகாரம் கல்லின் மேல் போட்ட மண்பாத்திரம் போன்றே வீண்.

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.



அடக்கத்தை தனது உடைமையாக உடையவரை அறிவற்றவர் என எண்ணி அவரைக் கடந்த அறிவு தனக்கு உள்ளதாகவும் கருத வேண்டாம் - சிறிய ஓடையில் ஓடிடும் மீன்களை ஓடவிட்டு வளமான மீன் வரும் வரைக் காத்திருக்குமாம் கொக்கு.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.



வற்றிய குளத்தில் தங்காத நீர்ப்பறவைப்போல் வறுமையான காலத்தில் விலகிடுவார், உறவற்றவர்கள் - அதே குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் பிணைந்து இருப்பதைப் போலவே ஒட்டி இருப்பவர் உறவோர்.

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?



உயர்ந்தவர் என்றும் உயர்ந்தவரே, உயர்ந்தவர் தவிர மற்றையோர் கெட்டால் என்னவாகும் என்றால் - பொன்னால் செய்த குடம் உடைந்தாலும் பொன்னாகும். ஆனால் மண்ணால் ஆன குடம் உடைந்தால் போன்றே உயர்வற்றவர்.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.



ஆழத்தில் செல்லும்படி அமுக்கி எடுத்தாலும் ஒரு குடம் நான்கு குட ஆழ்கடல் நீரை எடுக்காது - தோழியே செல்வமும் ஆடவனும் எதிர்பட்டாலும் அவரவர் விதியின் அளவே பயன்படுத்த முடியும்.

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.



உடன் பிறந்தவர் உறவுக்காரர் என்று மட்டுமே வாழ்தல் வேண்டாம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவாத உயர்ந்த மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும். அந்த மருந்து போன்ற மனிதர்களும் உண்டு.

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.



உறைவிடத்து தலைவி உள்ளே இருக்க இல்லாமல் போக ஒன்றும் இருக்காது. உறைவிடத்தாள் உள்ளே இல்லை என்றால் - உறைவிடத்தாள் வலியுடன் மாற்றங்களை செய்வாள், அவள் இல்லாத வீடு புலி வாழும் இருப்பிடமாய் மாறும்.

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.



உள்ளபடியை உணர முற்பட வேண்டும் மட நெஞ்சமே. எண்ணப்படியே செயல்கள் அமையும் - எண்ணமிட்டுப் போய் கற்பகத்தைச் சேர்ந்தவர்க்கு எட்டிக் காய் கொடுத்தல் ( இறை உணர்ந்தவரை வெறுத்தல் ) முற் பிறவியில் செய்த செயல்.

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.



கல்லை பிளப்பதற்க்கு ஒப்பானவர்கள் கயவர்கள் கடுமையான சினத்தால் பொன்னை பிளப்பதற்க்கு ஒப்பானவர்கள் போன்றவர்களே - நீரை கிழிக்க முயன்றாலும் உடனே மறையும் வடு போல் மாறுமே சீர் பொருந்திய சான்றோர் சினம்.

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.



நல்ல தாமரை இருப்பிடத்தில் நல்ல அன்னம் கூடி இருப்பதைப் போல் கற்றவரைக் கற்றவரே நேசிப்பார்கள் - ஒழுக்கமற்ற முரடரை முரடரே விரும்புவார்கள் அடர்ந்த காட்டில் பிணத்தையே பற்றும் காக்கை.

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.



நஞ்சை உடமையாக கொண்ட நாகம் அதை அறிந்து தன்னை மறைத்தே இருக்கும். அஞ்சாமல் வெளியே இருக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் வஞ்சனை உள்ளவர்கள் தன்னை மறைத்தே இருப்பார், மறைத்துக் கொள்ளமாட்டார் வஞ்சனை அற்ற நெஞ்சத்தார்.

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.



ஆட்சியாளரையும் அழுக்கு இல்லாமல் கற்றவர் சீர்தூக்கி பார்க்கின் ஆட்சியாளரைவிட மாசு இன்றி கற்றவரே சிறந்தவர் - ஆட்சியாளருக்கு அதிகார வரம்புக்கு உட்பட்ட இடத்தை கடந்து சிறப்பு இல்லை கற்றவருக்கோ செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.



கல்லாத மனிதர்களுக்கு கற்று உணர்ந்தவர் சொல் எமன். ஒழுக்கம் இல்லாத மனிதர்களுக்கு நேர்மை எமன். மிருதுவான வாழை மரத்திற்க்கு அது பெற்ற காய் எமன். எமனே வீட்டிற்க்கு ஒத்திசைந்து ஒழுகாப் பெண்.

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று?



சந்தனத்தின் சிறிய குச்சி என்றாலும் தேய்த்த நேரத்தில் வாசனை குறையாது. ஆதலால் தன்னால் தர முடியாத தனம் இருப்பவராக இருந்தாலும் தகுதியான காப்பாளர் கேட்டால் மனமின்றி போக மாற்று வழி இல்லை.

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.



மலர்ந்த உறவுகளும் மதிக்கத்தக்க பொருளும் நல்வடிவும் நற்குலம் என்பதும் எல்லாம் - செல்வமகள் தங்கும் அளவே ஆகும். அவள் பிரிந்தால் அவளோடு போகும்.

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.



கசக்கி பிழியும்படி தீமைகள் செய்தாலும் தன்னால் முடிந்த அளவு அவரையும் காப்பர் அறிவு உள்ளவர்கள். மாந்தர் வெட்டி வீழ்த்திட வந்தாலும் மரம் குளிர் நிழலை தந்து காப்பதை காண்கிறோம்.



திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

Meta Information:
மூதுரை, ஔவையார் , Moodurai Couplets, சிவயோகி சிவக்குமார், sivayogi sivakumar