ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: உடம்பின் பயன்

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.


உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வுடை யார்.


ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார்.


பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று.


உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம்.


மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.


ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு.


உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு.


உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு.


அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.



Meta Information:
உடம்பின் பயன், வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural