குதம்பைச் சித்தர்
TAGS:
pambatti Couplet,குதம்பைச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,kudambai padalgal in tamil lyrics,devotional songs,Poet kudambai siddharபூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.


போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்
சாங்காலம் இல்லையடி குதம்பாய்
சாங்காலம் இல்லையடி.


செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி.


வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்
கஸ்திசற்று இல்லையடி குதம்பாய்
கஸ்திசற்று இல்லையடி.


பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி.


காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி.


வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.


எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.


அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.


ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி.


தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.


அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே.


விந்தை பராபர வத்தின் இணையடி
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி.


விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.


பத்தி சற்றில்லாத பாமர பாவிக்கு
முத்திசற்று இல்லையடி குதம்பாய்
முத்திசற்று இல்லையடி.


எல்லாப் பொருளுக்கு மேலான என்தேவைச்
சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமற் சொல்வாயடி.


எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.


காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணமற் ஏத்தடியே.


அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.


மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.


தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
மூவரும் ஆவாரடி குதம்பாய்
மூவரும் ஆவாரடி.


சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய்
வித்தாகும் வத்துவடி குதம்பாய்
வித்தாகும் வத்துவடி.


உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண்.


நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண்.


புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி.


அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
புவனத்தில் உண்மையடி குதம்பாய்
புவனத்தில் உண்மையடி.


காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய்
ஆரணஞ் சொல்லுமடி.


காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந்
தாரணி சொல்லுமடி குதம்பாய்
தாரணி சொல்லுமடி.


ஆதிசகத்து என்று அநாதி மகத் தென்று
மேதினி கூறுமடி குதம்பாய்
மேதினி கூறுமடி.


ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
மந்திரம் போற்றுமடி குதம்பாய்
மந்திரம் போற்றுமடி.


யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல்
சேனையைத் தந்தானடி குதம்பாய்
சேனையைத் தந்தானடி.


மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
எண்ணளவு வில்லையடி குதம்பாய்
எண்ணளவு வில்லையடி.


ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.


சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
தேவன் அவனாமடி குதம்பாய்
தேவன் அவனாமடி.


சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
சத்தியம் உள்ளானடி குதம்பாய்
சத்தியம் உள்ளானடி.


எங்கும் வியாபகம் ஈகை விவேங்கள்
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
பொங்கமாய் உள்ளானடி.


தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.


ஆத்துமந் தன்னை அரூபமா எண்ணினாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ.


அண்டத்தைத் தேவன் அளிக்க எண் ணும்போதே
அண்டம் உண் டாயிற்றடி குதம்பாய்
அண்டம் உண் டாயிற்றடி.


வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள்
தான் அவர் செய்தாரடி குதம்பாய்
தான் அவர் செய்தாரடி.


ஒன்றும் இல்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை
நின்றிடச் செய்தானடி குதம்பாய்
நின்றிடச் செய்தானடி.


கருவி களில்லாமற் காணும்பல் அண்டங்கள்
உருவுறச் செய்தானடி குதம்பாய்
உருவுறச் செய்தானடி.


எல்லா உயிர்களும் எந்த உலகமும்
வல்லானைப் போற்றுமடி குதம்பாய்
வல்லானைப் போற்றுமடி.


என்றும் அழியாமை எங்கு நிறைவாகி
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.


கண்டத்தை ஆள்கின்ற காவலர் போற்சோதி
அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய்
அண்டத்தை ஆள்கின்றதே.


அண்டம் உண் டாகுமுன் ஆக அநாதியாய்க்
கண்டது பிரமமடி குதம்பாய்
கண்டது பிரமமடி.


எந்த உயிர் கட்கும் எந்த உலகிற்கும்
அந்தமாய் நின்றானடி குதம்பாய்
அந்தமாய் நின்றாடின.


தணிவான புத்தியால் தாணு அறியாதோர்
அணுவேனும் இல்லையடி குதம்பாய்
அணுவேனும் இல்லையடி.


மூன்று தொழிலினை மூர்த்திசெய் யாவிடில்
தோன்றாது உலகமடி குதம்பாய்
தோன்றாது உலகமடி.


சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே
யாரலே யாகுமடி? குதம்பாய்
யாரலே யாகுமடி?