இடைக்காட்டுச் சித்தர் பாடல்
TAGS:
azhkkani Couplet,இடைக்காட்டுச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,idaikaadar padalgal in tamil lyrics,devotional songs,Poet idaikaadar siddhar,idaikadar siddharகாப்பு

ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோ துறும்படி முப்பொறி யொத்துறக்
காத லாகக் கருத்திற் கருதுவாம்.

தாண்டவராயக்கோன் கூறுதல்

எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும்
எல்லாப் பொருள்களு மெண்ணரிய
வல்லாள னாதி பரம சிவனது
சொல்லா லாகுமே கோனாரே.

வானியல் போல வயங்கும் பிரமமே
சூனிய மென்றறிந் தேத்தாக்கால்
ஊனிய லாவிக் கொருகதி யில்லையென்
றோர்ந்துகொள் ளுவீர்நீர் கோனாரே.

முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக் குறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ்
சேரா வாகுமே கோனாரே.

தொல்லைப் பிறவியின் தொந்தமுற் றறவே
சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு
இல்லையென் றெண்ணுவீர் கோனாரே.

ஆரண மூலத்தை அன்புடனே பர
மானந்தக் கோலத்தைப் பன்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திடு கோனாரே.

காலா காலங் கடந்திடு சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது கோனாரே.

சொல்லருஞ் சகல நிட்கள மானதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற்
அந்தகன் கிட்டுமோ கோனாரே.

சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
நற்கதி சேர்ந்திடும் கோனாரே.

மும்மலம் நீக்கிட முப்பொறிக் கிட்டாத
முப்பாழ் கிடந்ததா மப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமைத்துஞ்
சிந்தையில் வைப்பீரே கோனாரே.

பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்ற நின்றதைப் பற்றி யன்பாய்
நெஞ்சத் திருத்தி யிரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே.

நாராயணக்கோன் கூறுதல்

சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப்
பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே.

கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
தண்ணளியை யுள்ளில்வைத்துச் சாரூபஞ் சாருவனே.

கண்ணிகள்

மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே.

சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ்,
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே.

ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாங் கண்டறிவாய் தாண்ட வக்கோனே.

ஓசையுள்ள டங்குமுன்னந் தாண்ட வக்கோனே - மூல
ஓங்காரங் கண்டறிநீ தாண்ட வக்கோனே.

மூலப் பகுதியறத் தாண்ட வக்கோனே - உள்ளே
முளைத்தவேர் பிடுங்கேடா தாண்ட வக்கோனே.

சாலக் கடத்தியல்பு தாண்ட வக்கோனே - மலச்
சாலென்றே தேர்ந்தறிநீ தாண்ட வக்கோனே.

பற்றே பிறப்புண்டாக்குந் தாண்ட வக்கோனே - அதைப்
பற்றா தறுத்துவிடு தாண்ட வக்கோனே.

சற்றே பிரமத்திச்திசை தாண்ட வக்கோனே - உன்னுள்
சலியாமல் வைக்கவேண்டுந் தாண்ட வக்கோனே.

அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே - குரு
அற்றவர் கதியடையார் தாண்ட வக்கோனே.

செவிதனிற்கே ளாதமறை தாண்ட வக்கோனே - குரு
செப்பில் வெளி யாமல்லவோ தாண்ட வக்கோனே.

கட்டளைக் கலித்துறை

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே.

நேரிசை வெண்பா

போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்,
மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - நரகம்போம்,
வேதமுத லாகமங்கண் மேலான தென்றுபல்கால்,
ஓதுபிர மத்துற்றக் கால்.

தாண்டவராயக்கோன் கூறுதல்

தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே.

ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்தவட் டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறுஞ் சந்தேகந் தீர்த்தேன். (தாந்)

அந்தக் கரணமெனச் சொன்னா லாட்டையும்
அஞ்ஞான மென்னு மடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
சாவா திருந்திடக் கோட்டையுங் கட்டினேன். (தாந்)

மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை
வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே. (தாந்)

பற்றிரண் டும்மறப் பண்புற்றேன் நன்புற்றேன்
பாலையு முட்கொண்டேன் மேலையாங் கட்கொண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன். (தாந்)

அண்ணாக்கை யூடே யடைத்தே யமுதுண்ணேன்
அந்தரத் தரத்தை யப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூ சைபண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்றன்றி வேறேயொன்றை நண்ணேன். (தாந்)

மண்ணாதி பூதங்க ளைந்தையுங் கண்டேனே
மாய விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுட் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே. (தாந்)

வாக்காதி யைந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயைசம் பந்தங்க ளைந்தும் பிரிந்தேனே
நோக்கரும் யோகங்க ளைந்தும் புரிந்தேனே
நுவலும்மற் றைந்தியோக நோக்கம் பரிந்தேனே. (தாந்)

ஆறா தாரத்தெய் வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்டவா னந்தத்திற் கூடு
கோசமைந் துங்கண்டு குன்றேறி யாடு. (தாந்)

நாராயணக்கோன் கூறுதல்

ஆதி பகவனையே பசுவே
அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான் பசுவே
சொந்தம தாகாதோ.

எங்கும் நிறைப்பொருளைப் பசுவே
எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில் பசுவே
சந்ததஞ் சாருவையே.

அல்லும் பகலும் நிதம் பசுவே
ஆதி பதந்தேடில்
புல்லு மோட்சநிலை பசுவே
பூரணங் காண்பாயே.

ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே
உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே பசுவே
நேர்மை யறிவாயே.

எல்லா மிருந்தாலும் பசுவே
ஈசர் அருளிலையேல்
இல்லாத் தன்மையென்றே பசுவே
எண்ணிப் பணிவாயே.

தேவனு தவியின்றிப் பசுவே
தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கு மாவியதாம் பசுவே
அத்தன் திருவடியே.

தாயினும் அன்பனன்றோ பசுவே
சத்திக்குள் ளானவன்தான்
நேயம் உடையவர்பால் பசுவே
நீங்கா திருப்பானே.

முத்திக்கு வித்தானோன் பசுவே
மூலப் பொருளானோன்
சத்திக் குறவானோன் பசுவே
தன்னைத் துதிப்பாயே.

ஐயன் திருப்பாதம் பசுவே
அன்புற்றுநீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே
விட்டொடுங் கண்டாயே.

சந்திர சேகரன்றாள் பசுவே
தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மான்முதலோர் பசுவே
ஏவல் புரிவாரே.

கட்புலன் காணவொண்ணாப் பசுவே
கர்த்தன் அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப் பசுவே
உன்னத மெய்வாயே.

சுட்டியுங் காணவொண்ணாப் பசுவே
சூனிய மானவஸ்தை
ஒட்டிப் பிடிப்பாயேல் பசுவே
உன்னை நிகர்ப்பவர்யார்.

தன்மனந் தன்னாலே பசுவே
தாணுவைச் சாராதார்
வன்மர மொப்பாகப் பசுவே
வையத் துறைவாரே.

சொல்லென்னு நற்பொருளாம் பசுவே
சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை பசுவே
எப்பொருளுஞ் சொல்லுமே.

பலரொடு கிளத்தல்

கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.

மனம் வாக்கு காயமெனும் வாய்த்தபொறிக் கெட்டாத
தினகரனை நெஞ்சமதிற் சேவித்துப் போற்றீரே.