குதம்பைச் சித்தர்
TAGS:
pambatti Couplet,குதம்பைச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,kudambai padalgal in tamil lyrics,devotional songs,Poet kudambai siddharஎல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
வல்லார்க்கு முத்தியடி.


பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி.


பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
சந்தத முத்தியடி குதம்பாய்
சந்தத முத்தியடி.


ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.


மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு
வந்தெய்தும் முத்தியடி குதம்பாய்
வந்தெய்தும் முத்தியடி.


அந்தக் கரணம் அடங்க அடக்கினால்
சொந்தம் பிரமமடி குதம்பாய்
சொந்தம் பிரமமடி.


தாய்குச் சரியான தற்பரம் சார்ந்திடில்
வாய்க்கும் பதவியடி குதம்பாய்
வாய்க்கும் பதவியடி.


சுத்த பிரமத்தைத் தொந்தமென்று ஓட்டினால்
சித்திக்கும் முத்தியடி குதம்பாய்
சித்திக்கும் முத்தியடி.


கன்றை விடாதுசெல் கற்றாவைப்போல் வத்தை
ஒன்றினால் முத்தியடி குதம்பாய்
ஒன்றினால் முத்தியடி.


கைக்கனி போலவே காசறு பிரமத்தில்
சொக்கினால் முத்தியடி குதம்பாய்
சொக்கினால் முத்தியடி.


நித்திய வத்துவை நீங்காது நாடினால்
முத்திதான் சித்திக்குமே குதம்பாய்
முத்திதான் சித்திகுமே.


பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி.


துற்கந்த மாய்மலம் சோரும் உடலுக்கு
நற்கந்த மேதுக்கடி குதம்பாய்
நற்கந்த மேதுக்கடி.


நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
பூச்சுத்தான் ஏதுக்கடி.


சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
மேலை மினுக்காமடி குதம்பாய்
மேலை மினுக்காமடி.


பீவாச முள்ளவள் பீறலு உடம்புக்குப்
பூவாச மேதுக்கடி குதம்பாய்
பூவாச மேதுக்கடி.


போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
நீராட்டம் ஏதுக்கடி.


சீயு நிணமுந் திரண்ட உடம்பினை
ஆயுவ ஏதுக்கடி குதம்பாய்
ஆயுவ ஏதுக்கடி.


காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
வாகனம் ஏதுக்கடி.


கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்
பூவணை ஏதுக்கடி குதம்பாய்
பூவணை ஏதுக்கடி.


நெடுவரை போலவே நீண்ட கனதனம்
நடுவாக வந்ததடி குதம்பாய்
நடுவாக வந்ததடி.


கையால் அழைப்பது போல் உனது கண்
மையால் அழைப்பதென்ன குதம்பாய்
மையால் அழைப்பதென்ன.


முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்தபல்
உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய்
உதிர்ந்து கிடக்குமடி.


கழறும் கிளிமொழி காலஞ் சென்றாலது
குளறி அழியுமடி குதம்பாய்
குளறி அழியுமடி.


வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம்
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய்
தளர்ந்து விழுந்திடுமே.


பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல்
சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய்
சுருக்கம் விழுந்திடுமே.


கொள்ளை யாகக் கொழுத்தே எழுந்த கண்
நொள்ளைய தாய்விடுமே குதம்பாய்
நொள்ளைய தாய்விடுமே.


மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும்
பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய்
பஞ்சுபோல் ஆகிடுமே.


பொன்னாலே செய்யாடி போன்ற உன்கன்னங்கள்
பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய்
பின்னாலே ஒட்டிவிடும்.


நல்லாய் உன் அங்கமும் நன்கு நிமர்ந்தாலும்
வில்லாய்ப்பின் கூனிவிடும் குதம்பாய்
வில்லாய்ப்பின் கூனிவிடும்.


முந்தி நடக்கின்ற மொய்ம்பும்சின் னாளையில்
குந்தி இருக்கச் செய்யும் குதம்பாய்
குந்தி இருக்கச் செய்யும்.


பிறக்கும்போது உற்ற பெருமையைப் போலவே
இறக்கும்போது எய்துவிடும் குதம்பாய்
இறக்கும்போது எய்துவிடும்.


கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி.


கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்திற் தள்ளுமடி.


பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி.


கற்புள்ள மாதைக் கலக்க நினைக்கினும்
வற்புள்ள பாவமடி குதம்பாய்
வற்புள்ள பாவமடி.


தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது
கீழாம் நரகமடி குதம்பாய்
கீழாம் நரகமடி.


சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு
நித்தம் நரகமடி குதம்பாய்
நித்தம் நரகமடி.


எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத்
தப்பா நரகமடி குதம்பாய்
தப்பா நரகமடி.


பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே
ஏழாம் நரகமடி குதம்பாய்
ஏழாம் நரகமடி.


காயம் எடுத் தாதி கர்த்தரை எண்ணார்க்குத்
தீயாம் நரகமடி குதம்பாய்
தீயாம் நரகமடி.


அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத்
துன்பாம் நரகமடி குதம்பாய்
துன்பாம் நரகமடி?


செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
எங்காகும் நல்வழியே குதம்பாய்
எங்காகும் நல்வழியே.


மாத்திரைக் கோல்கொண்டு மாரீசஞ் செய்வார்க்குச்
சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
சாத்திரம் ஏதுக்கடி?


வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி?


ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்குக்
கப்பறை ஏதுக்கடி குதம்பாய்
கப்பறை ஏதுக்கடி?


சான்றோர் எனச் சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு
மான்தோல் ஏதுக்கடி குதம்பாய்
மான்தோல் ஏதுக்கடி.


நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத்
தாடிசடை ஏனோ குதம்பாய்
தாடிசடை ஏனோ?


நாதற்கு உறவாகி நற்தவம் சார்ந்தோர்க்குப்
பாதக் குறடுமுண்டோ குதம்பாய்
பாதக் குறடுமுண்டோ?


தபநிலை கண்டாதி தன்வழி பட்டோர்க்குச்
செபமாலை ஏதுக்கடி குதம்பாய்
செபமாலை ஏதுக்கடி?