சிவவாக்கியர்
TAGS:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs 550 couplet,550 songs,civavakiyam,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar



அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே.


கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.


ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.


ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.


வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக் கொடுப்பரே.


என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.


நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள் நான் இருக்குமாற தெங்ஙனே.


மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்


அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில்அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.


அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே.


கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம்இதாம் இதல்லவென்று வைத்துழலும் ஏழைகளாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே.


நானதேது நீயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராமஎன்ற நாமமே.


சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.


தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஇப் பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துஉணர்ந்து கொள்ளுமே.


நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்
பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.


வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே?
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.


அஞ்சுமூணு மெட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யுனும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.


அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி ஆனவாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானவாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?


சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே.


சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.


தங்கம்ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண் மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே.


அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்த கூறவல்லிரேல்
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.


அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில்அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியானது ஒன்றுமே.


நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.


வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யு மாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே.


ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம்
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே.


அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே.


பண்டுநான் பறித்துஎறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை.


அண்டர்கோன் இருப்பிடம் அறிந்தஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரே
விண்டவேத பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே.


நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்
நெருப்பும்நீரும் உம்முளே நினைத்துகூற வல்லிரேல்
கருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.


பாட்டிலாத பரமனைப் பரலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டி மெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே.


செய்யதெங்கி இளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.


மாறுபட்ட மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டு போய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.


கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.


செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே.


பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே.


இருக்கநாலு வேதமும் எழுத்தைஅற வோதிலும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்து உண்மைகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.


கலத்தில்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே.


பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே.


வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில்எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.


ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந் திரங்கள்எச்சில்
மோதகங்க ளானதுஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்
மாதிருந்த விந்தும்எச்சில் மதியும்எச்சில் ஒளியும்எச்சில்
ஏதில்எச்சில் இல்லதில்லை யில்லையில்லை யில்லையே.


பிறப்பதற்கு முன்னெலாம் இருக்குமாற தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாற தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.


அம்பலத்தை அம்புகொண்டுஅசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ
செம்பொன்அம்ப லத்துளே தெளிந்ததே சிவாயமே.


சித்தமேது சிந்தையேது சிவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேதம் அற்றது
முத்தியேது மூலமேது மூலமந் திரங்கள்ஏது
வித்திலாத வித்திலே இன்னதென்று இயம்புமே.


சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே.


சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.


கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே.


தறையினில் கிடந்தபோ தன்றுதூமை என்றிலீர்
துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை என்றிலீர்
பறையறைந்து நீர்பிறந்த தன்று தூமை என்றிலீர்
புரையிலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.


தூமைதூமை என்றுளே துவண்டலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந் தனேகவேதம் ஓதுறீர்
தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.





Meta Information:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar