நேமிநாதம்
நேமிநாதம்  » சொல்லதிகாரம்  » மொழியாக்க மரபு


« கடவுள் வாழ்த்து 
வேற்றுமை மரபு » 


28.  ஏற்ற திணையரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
வேற்றுமை எட்டும் தொகையாறும் - ஆற்றரிய
மூன்றிடமுங் காலங்கள் மூன்றும் இரண்டிடத்தால்
தோன்ற வுரைப்பதாஞ் சொல்.

29.  மக்கள் நரகரே வானோர் எனும்பொருள்கள்
தொக்க வுயர்திணையாந் தூமொழியாய் - மிக்க
வுயிருள் ளனவும் உயிரில் லனவுஞ்
செயிரில் அஃறிணையாஞ் சென்று.

30.  ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல வென்று
மருவியபா லைந்தும் வகுப்பின் - பொருவிலா
வோங்கு திணைப்பால் ஒருமூன் றொழிந்தவை
பாங்கில் அஃறிணைப்பா லாம்.

31.  அன்னானும் அள்ளாளும் அர்ஆர்பவ் வீறுமா
முன்னை யுயர்திணைப்பான் மூன்றற்குந் - தன்வினைகொண்டு
ஆய்ந்த துறுடுவும் அஆவவ் வீறுமாம்
எய்த அஃறிணைப்பாற் கீங்கு.

32.  பாலே திணையே வினாவே பகர்மரபே
காலமே செப்பே கருதிடமே - போலும்
பிறழ்வுஞ் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்
உறழ்வுஞ் சிதைந்த வுரை.

33.  ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும்
ஏவல் உறுவதுகூற் றிந்நான்கும் - பேதாய்
மறுத்தல் உடன்படுதல் அன்றெனினு மன்ற
விறுத்தலே போலு மிவை.

34.  ஐயந் திணைபாலில் தோன்றுமேல் அவ்விரண்டும்
எய்தும் பொதுமொழியால் ஈண்டுரைக்க - மெய்தெரிந்தா
லன்மை துணிபொருண்மேல் வைக்கவொரு பேர்ப்பொதுச்சொல்
பன்மைசிறப் பாலுரைத்தல் பண்பு.

35.  குழுவடிமை வேந்து குழவி விருந்து
வழுவுறுப்புத் திங்கண் மகவும் - பழுதில்
உயர்திணைப் பண்போடு உயிருப்பு மெய்யும்
அயர்வில் அஃறிணையே யாம்.

36.  எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையாம்
எண்ணிவியங் கொள்க இருதிணையும் - எண்ணினாற்
றன்மையாம் அஃறிணையுஞ் சொன்னமொழி தன்னினத்தை
யுன்னி முடித்தலு முண்டு.

37.  உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
அயர்வில் திணைபான் மயங்குஞ் - செயிரில்
வழக்குந் தகுதியுமாய் வந்தொழுகுஞ் சொற்கள்
இழுக்கல்ல முன்னை இயல்பு.

38.  பெண்ணான் ஒழிந்த பெயர்தொழி லாகியசொல்
உண்மை யிருதிணைமேல் உய்த்தறிக - எண்ணி
யினைத்தென் றறிந்த சினைமுதற்பேர்க் கெல்லாம்
வினைப்படுப்பின் உம்மை மிகும்.

39.  பொதுபிரிபால் எண்ணொருமைக் கண்ணன்றிப் போகா
பொதுத்தொழிலை யொன்றாற் புகலார் - மதித்த
ஒருபொருண்மேற் பல்பெயருண் டானால் அவற்றிற்கு
ஒருவினையே சொல்லுக ஓர்ந்து.

40.  ஒப்பிகந்த பல்பொருள்மேற் சொல்லும் உருசொல்லைத்
தப்பா வினையினஞ் சார்பினாற் - செப்புக
சாதி முதலாஞ் சிறப்புப்பேர் தன்முன்னர்
ஓதார் இயற்பெயரை உய்த்து.

41.  இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுஞ் வழக்கேல்
இனமுண்டாய்ப் பண்புவந் தெய்தும் - புனையிழாய்
திண்ண மடையுஞ் சினையு முதலுமாய்
வண்ணச் சினைசொல் வரும்.


« கடவுள் வாழ்த்து 
வேற்றுமை மரபு » 


Meta Information:
மொழியாக்க மரபு,சொல்லதிகாரம்,நேமிநாதம் இலக்கணம் nannool