மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு  » தகரயெதுகை


« ணகரயெதுகை 
நகரயெதுகை » 


95.  மதலையே கொன்றை பிள்ளை மரக்கலங் கொடுங்கை தூணாம்
சிதலை நோய் துணிசொல்லென்ப சீதநீர்குளிரே மேகம்
பதலை யோர்கட்பறைப்பேர் பருவரை தாழிக்கும் பேர்
கதலியே வாழை தேற்றுக் காற்றாடி துவச நாற்பேர்.

96.  இதழ் பனையேடு பூவின் இத ழுதடென விம்முப்பேர்
கதழ்வு வேகங் சிறப்பாங் களி செருக்கொடு குழம்பு
மதுகமே யிருப்பை யொட்டி மதுரமாந் தராவுமாமே
சிதட னந்தகன் மூடன்பேர் திதி பக்க நிலை பேறும்பேர் .

97.  ஆத னாருயி ரோர் வில்லான் அங்கி யென்பது தீச் சட்டை
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர்
ஏதந் துன்பங் குற்றப் பேர் இமமே மயானங் காட்டம்
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை.

98.  சூத மாமரமே வண்டு சூதுட னிரதந் தோன்றல்
சூதகமே யாசௌசந் தோகைமார் தோயாப்பூப்பாம்
பூத மா லிறந்தகாலம் புனித மைம்பூதஞ் சீவன்
மாதவந் தவம் வசந்தம் வாதமே தருக்கங் காற்றாம்.

99.  மதன் வலி வேள் வனப்பாம் வலித்தலே வளைத்தல் பேசல்
பதங்கம் புட்பொது விட்டிற் பேர் பலி பூசை பிச்சை நீராம்
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப் பட்டதாமே
நிதம்பமே அல்கு லென்ப நெடுமலைப் பக்கமும்பேர்.

100.  சதி யுரோகணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து
விதியென்ப வினை யயன்பேர் வேட்டுவன் மகநாள் வேடன்
பதி யிறை கேள்வ னூராம் பதுக்கையே பாறை தூறு
பிதிர் கதை நொடி தூவற்பேர் பிண்டமே திரளை பிச்சை

101.  ஆதியே முத னேரோடல் அருகன் மா லீசன் வேதன்
பூதியம் புவி யுடற்பேர் பொம்மலே பொலிவுஞ் சோறும்
பாதிரிப் பாடலப் பேர் பணைத்தெழு மூங்கிற்கும் பேர்
ஏதி யாயுதம் வாளென்ப இழை நூ லாபரண மாமே.

102.  சாதியே பிரம்பு கள் ளோர்தரு சிறுசண்பகப் பேர்
போத ஞானம் தோணிப்பேர் புகல் குதி ருடல் சொல் வெற்றி
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பாம்
ஓதிமம் அன்னம் வெற்பா முருத்தலே தோற்றல் கோபம் .

103.  சுதை மகள் கறவாத்தேனு சுண்ணச்சாந் தமுது நாற்பேர்
புதையென்ப கணையின் கட்டும் புதுமையும் மறைவு முப்பேர்
மதுவென்ப நறவுந் தேனும் வசந்தகாலமுமா மென்ப
கதை தண்டாயுதமே வார்த்தை காரணமிம் முப்பேரே

104.  சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்றேவி
மேதை தோல் புத னிறைச்சி மிக்க பேரறிவு கள்ளாம்
கோதை முன்கைத் தோற் கட்டி குழறார் காற் றொழுங்கு சேரன்
ஓதை பேரொலி மதிற்பேர் உக்கந் தீ யிடை யா னேறு.

105.  அத்தர் பொன் பாதிகை கண்ணாடி சொற்பொருள் கா டோர்நாள்
புத்தகங் கோசமென்ப சித்திரப்படாமு மாமே
நத்தமே யிருளுமூரு நந்துட னிரவு நாற்பேர்
துத்த மோரிசை நாய் பாலே வயிறு கண் மருந்துஞ் சொல்லும்.

106.  அத்தென்ப அரைஞாண் செம்மை யசைச்சொலோ டிசைப்பு நாற்பேர்
கொத்துப் பூங்கொத்துத் தொண்டாந் தூம்பு வேய் துளை மரக்கால்
தத்தை மூத்தாள் கிளிக் காந்தழல் கிளிகடிகோல் செந்தீ
உத்தர மூழித்தீ மேலொடு மறுமொழி வடக்காம்.

107.  கூத்தனே யுயிர் நடன்பேர் குலங் குடி கோயில் கூட்டம்
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வியுறு பதனழிவு முப்பேர்
பாத்தென்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர்
தீர்த்தமே விழாவு நீருந் தீர்த்தனே யருக னாசான்.

108.  குத்தி மண் ணடக்க மென்ப கோணம் வாள் குதிரை மூக்காம்
பத்தியே முறை யொழுக்கம் பகர் வழிபாடு முப்பேர்
அத்தி யார்கலியே யானை யத வெலும் பாகநாற்பேர்
சத்தியஞ் சபத மெய்யாந் தபுதலே சாவுங் கேடும்.

109.  பித்திகை கருமுகைக்குப் பெயர் சுவர் தலமுமாகும்
கத்திகை தொடை விகற்பந் துவசமே கமழ் வாசந்தி
உத்தி செந்திரு வுருப்புச் சுணங்கு ரையாடன் முப்பேர்
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர்பொறி புத லொன்றாமே.

110.  சித்தரபானு செந்தீ திவாகர னாண்டொன்றின் பேர்
பத்திர மிலை வனப்புப் படைநன்மை சிறகே பாணம்
சித்திர மழ கோர்பாடல் சிறந்த விம்மித மேரண்டம்
சத்திரங் குடையே யன்னசாலை கைவிடா வேல் வேள்வி.

111.  காத்திரங் கன மெய் சீற்றங் களிற்றின் முன்காலே கீரி
நேத்திரங்கண் பட்டாடை நீலியே கருமை துர்கை
கோத்திரம் புடவி தானே குலமொடு மலையுமாமே
பாத்தியே சிறுசெய் யில்லம் பகுத்தலும் வகுத்த நாமம்.

112.  சதமிலை யிறகு நூறு சத்தமே யோசை யோழம்
கதவமே கதவு காப்பாங் கழங்கு போய் நடங் கழற்சி
பதமூர லின்பஞ் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை
மதியோர் முன்னிலை யசைச் சொன் மாத மம்புலி புத்திப்பேர்.

113.  பீதகஞ் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலிப்பேர்
சாதகம் வானம் பாடி சனனம் பாரிட முப்பேரே
சேதகஞ் சேறு செம்மை தேயந்தா னுடம்பு நாடாம்
மாத ரோர்ரிடைச்சொல் காதல் வனப்பொடு மகளிராமே.

114.  சோதி மால ருகன் பானு சுடர்விளக் கீச னோர்நாள்
பூதியே நரகஞ் செல்வந் துர்கந்தம் புழுதி நீறாம்
வீதியே தெரு நேரோடல் மேலென்ப திடம் விண் மேற்காம்
மாதிரந் திசை யாகாயம் மலை யானை நில மைம்பேரே.

115.  தாது பொன்முதலா மேழும் சடமுறு தாதோரேழும்
பூதமோர் ரைந்துங் காவிக்கல்லுடன் புகலு நாற்பேர்
வேதிகை பலகை திண்ணை வெதிரேன்ப செவிடு வேணு
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை.

116.  கதுப்பே யாண்மயிரும் பெண்பால்மயிரொடு கவுளு முப்பேர்
விதப்பே கம்பித மிக்காகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம்
அதிர் பொலி நடுக்கமென்ப அகப்பாவே புரிசை மேடை
ஒதுக்கமே நடை மறைப்பாம் ஒருத்த லாண்விலங்கு வேழம்.

117.  பத்திரி பறவை காளி பரி யிலை பாணமைம் பேர்
அத்தரி கழுதை விண் ணெட்டகம் பரி அசலம் அம்பாம்
சத்தியே யுமை வேல் கான்றல் குடை வலி துவசந் தானாம்
சுத்தியே யகல் வெண்சங்கஞ் சுத்த மோர் கருவிக்கும்பேர்.

118.  புத்தன்மாலருகன் சாத்தன் பூழில்தானகில் பூமிப்பேர்
புத்தேளே புதுமை தேவாம் பூட்கை தோல் மேற்கோள் யாளி
கைத்தல்துன்னங்கைத்தற்பேர் சாறு கள் விழவு தாறாம்
முத்தமே பிரியமோட்டம் மருதநன்னிலமுத்தாமே.

119.  அத்தனே மூத்தோன் தந்தை அரனொடு குருவுந்நாற்பேர்
சித்தமே திட முள்ளப் பேர் சேகரந் தலை மா வேராம்
கைத்தலே சினங் கைப்பாகுங் கஞறலே பொலிவு கன்றல்
சித்தென்ப செயமே ஞானஞ் செய் யென்ப நில மேவற்பேர்.

120.  உத்திரஞ் சித்தரஞ்சேர்ந்தொளிருமில்லுறுப்போ டோர்நாள்
பைத்தலே முனிவினோடு பசுத்தலும் பகரலாகும்
மத்திகையே சம்மட்டி சுடர்நிலைதண்டு மாலை
மத்தென்ப தயிர்மத்தோடு மத்தமு மிருபேராமே.

121.  மதர்வு மேவுதல் வனப்பு வலி யிட மிகுதி யைம்பேர்
புதவென்ப கதவோர் புல்லாம் புணர்சியே கலவி கூடல்
சித ருறி திவலை வண்டு சீலையின்துணி நாற்பேரே
அதர் வழி புழுதி யாடடின்அதரு நுண்மணலு மாமே.

122.  முதலை செங்கிடை யிடங்கர் முருந்தென மெழியலாகும்
அத மிறங்குதல் பாதாங் கீழு மென்றைறுயு முப்பேர்
கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியுங் காட்டும்
மத மிபமதஞ் செருக்காம் மாயையே மாயஞ் சத்தி.

123.  பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மைப் பேர்
பேதையோர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர்
வாதுவர் யானைப்பாகர் வயப்பரிமாவடிப் பேர்
மூதிரை யாதிரைப்பேர் முக்கணன் பேருமாமே.

124.  தாதியே பரணி நாளும் அடிமையும் யிருபேர்சாற்றும்
போதுதான் காலம் பூவாம் போர்வை தோல் கவச மீக்கோள்
சாதமே திடம் பதப்பேர் தகைமை ஏர் இரியியல்பு பீடாம்
வீதலே கெடுதல் சாவே யிலம்பாடும் விளம்பு முப்பேர்.


« ணகரயெதுகை 
நகரயெதுகை » 


Meta Information:
தகரயெதுகை, சூடாமணி நிகண்டு ,இலக்கணம், soodamani nigandu,மண்டல புருடர்,Tamil tutorial