அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த வெண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே.
ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூல ம்ஆதலால்
தாகபோகம் அன்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும்அஞ் செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே.
மூலவாசல் மீதுளே முச்சதுர மாகியே
நாலுவாசல் எண்விரல் நடுவுதித்த மந்திரம்
கோலமொன்று மஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே.
சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்தவாதி சோதிநீ
உக்கரத் தடியுளே உணர்ந்தஅஞ் செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே.
குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே.
சுற்றமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவதுஉம்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரானிருந்த கோலமே.
மூலமென்ற மந்திரம் முளைத்தஅஞ் செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலமுண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால்
ஓலமென்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே.
தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமு நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
மூன்றுபத்து மூன்றையும் முன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்றலை
ஏன்றுவைத்த வைத்தபின் இயம்பும்அஞ் செழுத்தையும்
தோன்றவோத வல்லிரேல் துய்யசோதி காணுமே.
உம்பர்வான கத்தினும் உலகுபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன்மாட மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாதுதெய்வம் இல்லையில்லை இல்லையே.
பூவிலாய ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறு வேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே.
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தவப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை
சிந்தையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே.
மனவிகார மற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவரோதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மைநீர் தெளிந்ததே சிவாயமே.
இட்டகுண்டம் ஏதடா இருக்குவேதம் ஏதடா
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின்ஓரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே.
உறங்கிலென் விழிக்கிலென்உணர்வுசென் றொடுங்கி லென்,
சிறந்தஐம் புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்,
புறம்புமுள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய்,
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேனும் இல்லையே.
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே
வேதமென்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதமொன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யானுணர்ந்த நேர்மையே.
பொங்கியே தரித்தஅச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமாது ளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்
கொம்புமேல் வடிவுகொண்டு குருவிருந்த கோலமே.
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாது எங்ஙனில்
கண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே.
ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே
விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்று அறிமினோ அனாதிநின்ற ஆதியே.
உதித்தமந் திரத்தினும் ஒடுங்குமக் கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ
மதித்தமண் டலத்துளே மரித்துநீ ரிருந்தபின்
சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே.
திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள் வந்தசீடனும்
பருத்திட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே.
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்
மேருவுங் கடந்தஅண்ட கோளமுங் கடந்துபோய்
எழுத்தெலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே
யானுநீயு மேகலந்த தென்ன தொன்மை ஈசனே.
ஓம்நமோ என்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்
நானுநீயும் உண்டடா நலங்குலம் அதுண்டடா
ஊனுமூணும் ஒன்றுமே உணந்திடாய் எனக்குளே.
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்
நம்புலன்க ளாகிநின்ற நாதருக்க தேறுமோ
ஐம்புலனை வென்றிடா தவத்தமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதுங் கொடுப்பதும் அவத்தமே.
ஆணியான ஐம்புலன்கள் அவையுமொக்குள் ஒக்குமோ
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல்
ஊணுறக்க போகமும் உமக் கெனக்கும் ஒக்குமே.
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன் றெழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே.
புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே
பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரு தாமியங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே.
மவுன அஞ் செழுத்திலே வாசியேறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனுநானு மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.
வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமையென்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானுநீயும் கண்டதே.
வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழின்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே.
ஆகிகூவென் றேஉரைத்த அக்ஷரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கும் இங்குமாய்
ஏகமேக மாகவே இருப்பர்கோடி கோடியே.
கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்
தேடிதேடி தேடிதேடி தேகமும் கசங்கியே
கூடிக்கூடி கூடிக்கூடி நிற்பர் கோடிக்கோடியே.
கருத்திலான் வெளுத்திலான் பரனிருந்த காரணம்
இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டு மாகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்திற்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே.
வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான்
ஊதியூதி ஊதியூதி ஒளிமயங்கி உளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடையெருப் பொறுக்குவோன்
சாதிசாதி சாதிசாதி சாகரத்தைக் கண்டிடான்.
ஆண்மையாண்மை ஆண்மையாண்மை ஆண்மை கூறும் அசடரே
காண்மையான வாதிரூபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே.
மிங்குவென்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகுமேகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி.
சுடரெழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சமுங் கண்டறிந்தோன் ஞானியே.
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.
சூக்ஷமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே
தீக்ஷையான தீவிலே சிறந்ததே சிவாயமே.
பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும்
தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமுந்
கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே.
மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ்சுடரிலே
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்
ஓனமான செஞ்சுட ர்உதித்ததே சிவாயமே.
உதித்தெழுந்த வாலையும் உசங்கிநின்ற வாலையும்
சதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹு வுங் ஹீயுமானதே.
கூவுங்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள் போல் பொருந்திநின்ற பூரணம்
ஆவியாவி ஆவியாவி அன்பருள்ளம் உற்றதே.
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியைக்
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.
நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே.
ஆவியாவி ஆவியாவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே.
வித்திலே முளைத்தசோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே யொளிவதாகி மோனமான தீபமே
நத்திலோ திரட்சிபோன்ற நாதனை யறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே.
மாலையோடு காலையும், வடிந்து பொங்கும், மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.
மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகமென்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயாமே.
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar