தொல்காப்பியரின் தொல்காப்பியம்
தொல்காப்பியம்  » பொருளதிகாரம்  »  மரபியல்


« செய்யுளியல் 
நூல் மரபு » 


1494.  மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே.

1495.  ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப.

1496.  பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.

1497.  அவற்றுள்,
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை.

1498.  தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன.

1499.  மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு
ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய.

1500.  பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை.

1501.  நாயே பன்றி புலி முயல் நான்கும்
ஆயும் காலை குருளை என்ப.

1502.  நரியும் அற்றே நாடினர் கொளினே.

1503.  குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார்.

1504.  பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை
கொள்ளும் காலை நாய் அலங்கடையே.

1505.  யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே.

1506.  கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப.

1507.  மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன அப் பாலான.

1508.  யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.

1509.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.

1510.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.

1511.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.

1512.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.

1513.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே.

1514.  கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும்.

1515.  குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின் அப் பெயர்க்கு உரிய.

1516.  குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை
கிழவ அல்ல மக்கட்கண்ணே.

1517.  பிள்ளை குழவி கன்றே போத்து எனக்
கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே.

1518.  நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே.

1519.  சொல்லிய மரபின் இளமைதானே
சொல்லும் காலை அவை அல இலவே.

1520.  ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

1521.  புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

1522.  நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

1523.  சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

1524.  நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

1525.  மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

1526.  மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

1527.  ஒரு சார் விலங்கும் உள என மொழிப.

1528.  வேழக்கு உரித்தே விதந்து களிறு என்றல்.

1529.  கேழற்கண்ணும் கடி வரை இன்றே.

1530.  புல்வாய் புலி உழை மரையே கவரி
சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும்.

1531.  வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன.

1532.  ஏற்புடைத்து என்ப எருமைக்கண்ணும்.

1533.  பன்றி புல்வாய் உழையே கவரி
என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய.

1534.  எருமையும் மரையும் பெற்றமும் அன்ன.

1535.  கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே.

1536.  பெற்றம் எருமை புலி மரை புல்வாய்
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே.

1537.  நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய.

1538.  மயிலும் எழாலும் பயிலத் தோன்றும்.

1539.  இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய.

1540.  கலை என் காட்சி உழைக்கும் உரித்தே
நிலையிற்று அப் பெயர் முசுவின்கண்ணும்.

1541.  மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த என்ப யாட்டின்கண்ணே.

1542.  சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மா இருந் தூவி மயில் அலங்கடையே.

1543.  ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம்
ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப.

1544.  ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய
பெண்பால் எல்லாம் பெண் எனற்கு உரிய
காண்ப அவை அவை அப்பாலான.

1545.  பிடி என் பெண் பெயர் யானை மேற்றே.

1546.  ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை
பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய.

1547.  புள்ளும் உரிய அப் பெயர்க்கு என்ப.

1548.  பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்.

1549.  கோழி கூகை ஆயிரண்டு அல்லவை
சூழும் காலை அளகு எனல் அமையா.

1550.  அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே.

1551.  புல்வாய் நவ்வி உழையே கவரி
சொல்வாய் நாடின் பிணை எனப்படுமே.

1552.  பன்றி புல்வாய் நாய் என மூன்றும்
ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை.

1553.  பிணவல் எனினும் அவற்றின் மேற்றே.

1554.  பெற்றமும் எருமையும் மரையும் ஆவே.

1555.  பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய.

1556.  எருமையும் மரையும் பெற்றமும் நாகே.

1557.  நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே.

1558.  மூடும் கடமையும் யாடு அல பெறாஅ.

1559.  பாட்டி என்ப பன்றியும் நாயும்.

1560.  நரியும் அற்றே நாடினர் கொளினே.

1561.  குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி.

1562.  குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ் வாய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
முடிய வந்த அவ் வழக்கு உண்மையின்
கடியல் ஆகா கடன் அறிந்தோர்க்கே.

1563.  பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே.

1564.  நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய.

1565.  படையும் கொடியும் குடையும் முரசும்
நடை நவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.

1566.  அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.

1567.  பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்
நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே.

1568.  ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.

1569.  தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய
நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப.

1570.  இடை இரு வகையோர் அல்லது நாடின்
படை வகை பெறாஅர் என்மனார் புலவர்.

1571.  வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.

1572.  மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார் அப் பாலான.

1573.  கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே.

1574.  வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி.

1575.  வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே.

1576.  அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே.

1577.  வில்லும் வேலும் கழலும் கண்ணியும்
தாரும் மாலையும் தேரும் மாவும்
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய.

1578.  அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை.85
புறக் காழனவே புல் என மொழிப.

1579.  அகக் காழனவே மரம் என மொழிப.

1580.  தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்.

1581.  இலையே தளிரே முறியே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப.

1582.  காயே பழமே தோலே செதிளே
வீழொடு என்று ஆங்கு அவையும் அன்ன.

1583.  நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இரு திணை ஐம் பால் இயல் நெறி வழாஅமைத்
திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.

1584.  மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபு வழிப் பட்ட சொல்லினானே.

1585.  மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்.

1586.  வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான.

1587.  மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
உரை படு நூல்தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின.

1588.  வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்.

1589.  வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும்.

1590.  வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்.

1591.  தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே.

1592.  ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி
ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத்திரு வகை உத்தியொடு புணரின்
நூல் என மொழிப நுணங்கு மொழிப் புலவர்.

1593.  உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம்
புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்
விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடு
புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே.

1594.  மேற் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு
சில் வகை எழுத்தின் செய்யுட்கு ஆகி
சொல்லும் காலை உரை அகத்து அடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி
துளக்கல் ஆகாத் துணைமை எய்தி
அளக்கல் ஆகா அரும் பொருட்டு ஆகி
பல வகையானும் பயன் தெரிபு உடையது
சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர்.

1595.  பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின்
கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும்.

1596.  விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி
சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா
ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்
மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்து அதுவே.

1597.  சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற
இன்றியமையாது இயைபவை எல்லாம்
ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே.

1598.  மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்
தன் நூலானும் முடிந்த நூலானும்
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி
தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்.

1599.  சொல்லப்பட்டன எல்லா மாண்பும்
மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே.

1600.  சிதைவு இல் என்ப முதல்வன் கண்ணே.

1601.  முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும்
வல்லோன் புணரா வாரம் போன்றே.

1602.  சிதைவு எனப்படுபவை வசை அற நாடின்
கூறியது கூறல் மாறு கொளக் கூறல்
குன்றக் கூறல் மிகை படக் கூறல்
பொருள் இல கூறல் மயங்கக் கூறல்
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்
பழித்த மொழியான் இழுக்கம் கூறல்
தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனம் கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்று விரி ஆகும்.

1603.  எதிர் மறுத்து உணரின் அத் திறத்தவும் அவையே.

1604.  ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்
நுதலியது அறிதல் அதிகார முறையே
தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந் நிறுத்தல்
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்
மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்
வாராததனான் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்
முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே
ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல்
தன் கோள் கூறல் முறை பிறழாமை
பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்
இறந்தது காத்தல் எதிரது போற்றல்
மொழிவாம் என்றல் கூறிற்று என்றல்
தான் குறியிடுதல் ஒருதலை அன்மை
முடிந்தது காட்டல் ஆணை கூறல்
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்
மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்
பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல்
பொருள் இடையிடுதல் எதிர் பொருள் உணர்த்தல்
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்
தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல்
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிற அவண் வரினும்
சொல்லிய வகையான் சுருங்க நாடி
மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்துகொண்டு
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே.


« செய்யுளியல் 
நூல் மரபு »