திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தூது / The Envoy

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.



தொகுத்துச் சொல்லித் தேவையற்றதை நீக்கி இன்புறும்படி எடுத்துரைத்து நன்றி பாரட்டும்படி நன்மை தரவல்லதாக அமைவதே தூது.



பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.



அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.



சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.


In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,
An envoy he who gains advantage for his lord.


He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).



thokachchollith thoovaadha neekki nakachcholli
nandri payappadhaanh thoodhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அன்பு நற்குடி மன்னரை மதித்தல் என உள்ளவரே தூதிற்கு சரியானவர். தொகுத்து தேவையானதை மட்டும் தெளிவாக நூல் எழத வல்லவர் போலும் சிறந்த வேல் வீச்சு போலும் தூது இருக்க வேண்டும். மரணம் வரும் என்றாலும் அஞ்சாமல் மன்னவனுக்கு உண்மை உரைக்கவேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.