திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வாய்மை / Veracity

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.



நான் உண்மையாய் அறிந்தவற்றுள் இல்லை என தோன்றுவது வாய்மையை விட நல்ல ஒன்று.



யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.



சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.



வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.


Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare.


Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.



yaameyyaak kaNtavatruL illai enaiththondrum
vaaimaiyin nalla piRa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உண்மை என்பது அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருப்பது. பொய்யும் உண்மை போன்றது நன்மை தரும் சமயத்தில். தனக்குத் தானே உண்மையாக இல்லாவிடின் நமக்கு நாமே எதிரியாக இருப்போம். மனதளவிலேயே பொய்யற்றவர் மக்கள் மனதில் நிலைப்பார் இதுவே தானம் தவம் கடந்த மேலானது. நீரில் குளிப்பது புற உடலை தூய்மைச் செய்யும் என்றால் உண்மையுடன் இருப்பது அகத்தூய்மைச் செய்யும். வெளிச்சம் போன்ற தீர்க்கமான முடிவை பெற நினைக்கும் சான்றோர் பொய்யாமையை போற்ற வேண்டும். உண்மையை விட சிறந்தது உலகில் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.