திருவள்ளுவரின் திருக்குறள்

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.



தெரிந்து உணராமல் பார்வையால் விழுங்கிய கண் கருணையின்றி அவசரமாய் அல்லல்படுவது ஏன்.



ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.



வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.



விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?.


How glancing eyes, that rash unweeting looked that day,
With sorrow measureless are wasting now away!.


The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).



therindhunaraa noakkiya un-kan parindhunaraap
paidhal uzhappadhu evan


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கண் தானாகவே தனக்கு காம நோய் உண்டாக்குகிறது. தெளிவாய் உணராமலேயே கண்டு அல்லல் படுகிறது. வேண்டும் என்று விரும்பி பார்த்து விலகி தவிக்கும் கண்ணின் செயல் நகைப்புக்குரியது. நீர் வடிந்து உலர்ந்த கண் நித்தியத்தை அடையும் காமநோய் கடவுள் மேல் வந்தால், பால் பற்றி வந்தால் பிறவித் தொடர் வரும். பிறவிக் கடல் கடக்கும் வேட்கையால் என் கண் இரவிலும் உறங்க மறுக்கிறது. இனிமையிலும் இனிமை இந் நோய் செய்த கண் இதனுடன் உட்படுவதால். அழுது அழுது கண்ணிர் வற்றினாலும் அவரை கண்டதால் மகிழ்வாய் இருக்கிறது. உறவு பாராட்டாமல் இருக்கவும் செய்யும் இம்மனிதர் இடத்தில் என் கண் அவரை காட்டிவிட்டது. விலகி நின்றாலும் கூடி மகிழ்ந்தாலும் உறக்கம் இல்லை இந்த கண்களுக்கு. மறைத்து வைப்பது ஊரார்க்கு அரிதாக இருக்க காரணம் என்னை போல் வெளிப்படுத்தும் கண் இருப்பதே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.