சிவவாக்கியர்
TAGS:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs 550 couplet,550 songs,civavakiyam,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyarசத்தியாவது ன்னுடல் தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையே
சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்ததோர் வெளி
சத்திசிவமு மாகிநின்று தண்மையாவது உண்மையே.


சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே.


அக்கரம் அனாதியல்ல ஆத்துமா அனாதியல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியல்ல
தக்கமிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதியல்ல
ஒக்க நின் றுடன் கலந்த உண்மைகாண் அனாதியே.


மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது
உண்மையாக நீயுரைக்க, வேணுமெங்கள் உத்தமா
பெண்மையாகி நின்றதொன்று விட்டுநின்ற தொட்டதை
உண்மையாய் உரைக்க முத்தி உட்கலந் திருந்ததே.


அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ் செழுத்துளே
உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ
சடக்கில்ஆறு வேதமும் தரிக்கஓதி லாமையால்
விடக்குநாயு மாயவோதி வேறு வேறு பேசுமோ.


உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தண்மையான காயமும் தரித்தரூபம் ஆனதும்
வெண்மையாகி நீறியே விளைந்து நின்ற தானதும்
உண்மையான ஞானிகள் விரித்துரைக்க வேண்டுமே.


எள்ளகத்தில் எண்ணெய்போல வெங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடு மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்ம்மையே.


வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணுவுண்டு அங்குஎன்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணுமன்றி வேறியாவும் கனாமயக்கம் ஒக்குமே.


வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே.


அத்திறங்க ளுக்குநீ அண்டம்எண் டிசைக்கும் நீ
திறத்திறங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கும்நீ உணர்வுநீ உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினுங் குடிகொளே.


ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் நின்றுநீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவதொன்றை ஓர்கிலீர்
நாடிநாடி உம்முளே நவின்றுநோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரம் குவிந்துகூட லாகுமே.


சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவமுமாகி நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவது உம்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்துகொள் பிரானிருந்த கோலமே.


அகாரமான தம்பலம் மனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே.


சக்கரம் பறந்ததோடி சக்கரமேல் பலகையாய்
செக்கிலாமல் எண்ணெய்போல் சிங்குவாயு தேயுவும்
உக்கிலே ஒளிகலந்து யுகங்களுங் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே.


வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீ
அருள் கொள்சீவ ராருடம்பு உடைமையாகத் தேர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே.


நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலமுண்ட கண்டனும் அயனுமந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே.


சுற்றமென்று சொல்வதுஞ் சுருதிமுடிவில் வைத்திடீர்
அத்தன்நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம்
பத்திமுற்றி அன்பர்கள் பரத்திலொன்று பாழது
பித்தரே இதைக்கருதி பேசலாவது எங்ஙனே.


எங்ஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசனேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கமண்மி யானை போலத் திரிமலங்கள் அற்றதே.


அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்ததீபம் இட்டதிற் பிறவாத பூசை ஏத்தியே
நற்றவம் புரிந்துயேக நாதர்பாதம் நாடியே
கற்றிருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே.


பார்த்து நின்றது அம்பலம் பரனாடும்அம்பலம்
கூத்துநின்றது அம்பலம் கோரமானதுஅம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலஞ்
சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.


சென்று சென்றிடந்தொறும் சிறந்த செம்பொனம்பலம்
அன்றுமின்றும் நின்றதோர் அனாதியானது அம்பலம்
என்று மென்று மிருப்பதோர் உறுதியான அம்பலம்
ஒன்றியொன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே.


தந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ
சிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ
எந்தைநீ இறைவநீ என்னையாண்ட ஈசனே.


எப்பிறப்பி லும்பிறந் திருந்தழிந்த ஏழைகாள்
இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்
அப்புடன் மலமறுத்து ஆசைநீக்க வல்லிரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாண லாகுமே.


மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ளும்முளே மதிக்கநீறு மும்முளே
மந்திரங்க ளாவது மனத்தினைந் தெழுத்துமே.


எட்டுயோக மானதும் இயங்குகின்ற நாதமும்
எட்டுவக்க ரத்துளே உகாரமும் அகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்டவக்ஷ ரத்துளே அமர்ந்ததே சிவாயமே.


பிரான்பிரா னென்றுநீர் பினத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்.


ஆதியில்லை அந்தமில்லை யானநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழுத்தும் இல்லையே.


அம்மையப்பன் அப்பனீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை யானபின்
அம்மையப்பன் நின்னையன்றி யாருமில்லை யில்லையே.


நூறுகோடி மந்திரம் நூறுகோடி ஆகமம்
நூறுகோடி நாளிருந்து ஊடாடினாலும் என்பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்திலோர் எழுத்ததாய்
சீரைஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.


முந்தவோ ரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
அந்தவோ ரெழுத்துளே பிறந்துகாய மானதும்
அந்தவோ ரெழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்தவோ ரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே.


கூட்டமிட்டு நீங்களும் கூடிவேத மோதுறீர்
ஏட்டகத்துள் ஈசனு மிருப்பதென் னெழுத்துளே
நாட்டமிட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்து ளாடிடும் அம்மையாணை உண்மையே.


காக்கைமூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே.


கொள்ளொணாது குவிக்கொணாது கோதறக் குலைக்கொணாது
அள்ளொணாது அணுகொணாது வாதிமூல மானதைத்
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பணன்
வில்லொணாது பொருளையான் விளம்புமாறது எங்ஙனே.


ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே.


ஒட்டுவைத்து கட்டிநீ உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்த்தனங்கு வாழுமோ
எட்டுமெட்டு மெட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டுமிட்ட அவ்விலே வைத்துணர்ந்து பாருமே.


இந்தவூரில் இல்லையென்று எங்குநாடி ஓடுறீர்
அந்தவூரில் ஈசனும் அமர்ந்துவாழ்வது எங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவிநின்ற நாதனை
அந்தமான சீயிலவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.


புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை யாக்கிராணன் சூழ்த்திடில்
அக்குமணி கொன்றை சூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்கசோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே.


பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர்கண் பற்றியே
பின்புமாங் கிஷத்தினால் போக மாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள் தான் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்விரே.


விட்டிருந்த தும்முளே விதனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசலொன்று
கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிஷத்துளே.


ஆகுமாகு மாகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லிரேல்
பாகுசேர் மொழியுமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர்.


உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தியேத்த வல்லிரேல்
தண்மைபெற் றிருக்கலாம் தவமும்வந்து நேரிடும்
கன்மதன்மம் ஆகுமீசர் காட்சிதானும் காணுமே.


பாலனாக வேணுமென்று பத்திமுற்றும் என்பரே
நாலுபாதம் உண்டதில் நனைந்திரண்டு அடுத்ததால்
மூலநாடி தன்னில் வன்னிமூட்டியந்த நீருண
ஏலவார் குழலியோடே ஈசர்பாதம் எய்துமே.


எய்துநின்னை அன்பினால் இறைஞ்சியேத்த வல்லிரேல்
எய்துமுண்மை தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மையிலங்கு கண்ணிபங்கன் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறுமது திண்ணமே.


திண்ணமென்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல்அன் புளன்புருகி அறிந்து நோக்க லாயிடும்
மண்ணமதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே.


இருப்பன்எட்டெட் டெண்ணிலே இருந்து வேறதாகுவன்
நெருப்புவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவான்
கருப்புகுந்து காலமே கலந்துசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே.


கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால்
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.


தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம் பெறும்
தெளிந்த நற்கிரியை பூசை சேரலாஞ் சாமீபமே
தெளிந்தநல் யோகந்தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே.


சேருவார்கள் ஞானமென்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மை யென்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலுஞ் செய்தொழில் திடப்படே.


திறமலிக்குநாலு பாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குழியதனைக் காட்டியுட் குறித்துநோக்க வல்லிரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப் பதமடைவரே.


அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவமும் பாதங்க ள்அல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையிலேறு மாறுபோல்
உடலில் மூல நாடியை உயரவேற்றி ஊன்றிடே.