சிவவாக்கியர்
TAGS:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs 550 couplet,550 songs,civavakiyam,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar



உச்சிமத்தி வீதியில்ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின் றுலாவவே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே.


அஞ்சிகொம்பில் நின்றநாத மாலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பரந்துநின்ற மோனமே.


சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரனிருந்த ஹூவிலே
இடுதியென்ற சோலையிலிருந்த முச் சுடரிலே
நடுதியென்று நாதமோடி நன்குற அமைத்ததே.


அமையுமால் மோனமும் அரனிருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தையுற்று நோக்கிலார்.


பாய்ச்சலூர் வழியிலே பரனிருந்த சுழியிலே
காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமான தேதடா விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே.


சோதிசோதி என்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி யென்று நாடும் ஆடவர் சிலவரே
வாதிவாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர்.


சுடரதாகி எழும்பியெங்கும் தூபமான காலமே
இடரதாகிப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்றவாதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே.


நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார்
நன்றியற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.


வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள் கோவென்றே நடுங்கி நங்கையான தீபமே.


தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்துநின்ற சூக்ஷமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே.


தேசிகன் கழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியனிருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே.


உட்கமல மோனமில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே.


உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளிகிரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோலக் கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே.


செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஹு விலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே.


ஆறுமூலைக் கோணத்தில் அமைந்த வொன்ப தாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திட
கூறுமென்று ஐவரங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பறந்ததே சிவாயமே.


பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும் ஆணும் அல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே.


அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹு வும் ஹீயுமானதே.


ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே
தானந்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில்
வேனலோடு மாறுபோல் விரிந்ததே சிவாயமே.


ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே.


வாயில் கண்ட கோணமில் வயங்குமைவர் வைகியே
சாயல் கண்டு சார்ந்த துந்தலைமன்னா யுறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூரங்கு சென்றதும்
பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே.


பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே
பிறந்ததே இறந்தபோதில் நீடிடாமற் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.


வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரியால யங்கடந்து மூலநாடி ஊடுபோய்.


அடிதுவக்கி முடியளவும் ஆறுமா நிலங்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே.


மந்திங் கள்உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங் கள்ஆவது மரத்திலூற ல்அன்றுகாண்
மந்திரங் கள்ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணமேதும் இல்லையே.


மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ள்உம்முளே மதித்தநீரும் உம்முளே
மந்திரங் கள்ஆவது மனத்தின்ஐந் தெழுத்துமே.


உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காணவேண்டும் மாந்தரே.


ஓரெழுத்து லிங்கமாய் ஓதுமட்ச ரத்துளே
ஓரெழுத்து யங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.


முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த அப்புனல்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர்நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே.


மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்
தோன்றுமோர் எழுத்தினோடு சொல்ல ஒன்ம்இமில்லையே.


வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சத்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே.


முப்புரத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம்அஞ் செழுத்துமாம்
தற்பரம் உதித்துநின்ற தாணுவெங்கும் ஆனபின்
இப்பறம் ஒடுங்குமோடி எங்கும் லிங்கமானதே.


ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்ட வெளியும் ஆனதே.


உருத்தரித்த போது சீவன்ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயமம் அஞ்செழுத்துமாம்
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலமேந்து நாதனே.


கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதுங்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதுங்
கருத்தரித்து உதித்தபோது காரணமிரண்டு கண்களாய்
கருத்தினின் றுதித்ததே கபாலம் ஏந்துநாதனே.


ஆனவன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட் டுஅலர்ந்தது
ஆனசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதான தானதா அவலமாய் மறைந்திடும்.


ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரங் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே.


எங்குமெங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகம் ஒன்றலோ
அங்குமிங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்குதா பரங்களும் தரித்துவாரது ஒன்றலோ
உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே.


அம்பரத்தில் ஆடுஞ்சோதி யானவன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததும்
அம்பரக் குழியிலே அங்கமிட் டுருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.


வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும்
ஆடியாடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே.


விட்டடி விரைத்ததோ வேருருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகங் கண்டதோ
தட்டுருவ மாகிநின்ற சதாசிவத் தொளியதோ
வட்டவீடறிந்த பேர்கள் வானதேவ ராவரே.


வானவர் நிறைந்த சோதி மானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்துமன்னு மாணிக்கங்கள் ஆனவே.


பன்னிரண்டு கால் நிறுத்திப் பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள்நின்று வேரிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவனின்று இயங்கிடும்
பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம மானதே.


உச்சிகண்டு கண்கள் கட்டிஉண்மைகண்டது எவ்விடம்
மச்சுமாளி கைக்குள்ளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களும் ஏகபோக மாய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே.


வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே
கோயிலிட்டு வாவியுமங் கொம்பிலே உலர்ந்தது
ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.


அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாம்
அட்சரத்தை யுந்திறந்த சோரமிட்ட லர்ந்ததும்
அட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.


கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்,
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தானமர்ந்தது ஒக்குமே.


கோயிலெங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ
தேயுவாயு ஒன்றலோ சிவனுமங்கே ஒன்றலோ
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவாரது ஒன்றலோ
காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.


காதுகண்கள் மூக்குவாய் கலந்துவாரது ஒன்றலோ
சோதியிட் டெடுத்ததும் சுகங்களஞ்சும் ஒன்றலோ
ஓதிவைத்த சாத்திரம் உதித்துவாரது ஒன்றலோ
நாதவீடறிந்த பேர்கள் நாதராவர் காணுமே.


அவ்வுதித்த வட்சரத்தின் உட்கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே.


அகார மென்னும் அக்கரத்தில் அக்கர மொழிந்ததோ
அகாரமென்னும் அக்கரத்தி அவ்வுவந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ
விகாரமற்ற ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.





Meta Information:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar