சிவவாக்கியர்
TAGS:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs 550 couplet,550 songs,civavakiyam,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar



மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றுமஞ் சும்எழுத்துமாய் முழங்குமவ் எழுத்துளே
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றுமண்டத்திலே சொல்லவெங்கும் இல்லையே.


சோறுகின்ற பூதம்போல் சுணங்குபோல் கிடந்தநீர்
நாறுகின்ற கும்பியில் நவின் றெழுந்த மூடரே
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லிரேல்
ஆறுகோடி வேணியார் ஆறிலொன்றில் ஆவிரே.


வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
அட்டவக் கரத்துளே அடக்குமும் ஒடுக்கமும்
எட்டுமெட்டும் எட்டுமாய் இயங்குசக் கரத்துளே
எட்டலாம் உதித்ததுஎம்பி ரானைநா னறிந்தபின்.


பேசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கறார்
ஆசையான ஐவரை அடக்கியோர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன்வந் தொலிக்குமே.


நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சிலஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே.


பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே.


பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
நித்தமும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்
பச்சைமண் இடிந்துபோய் பரந்ததும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்து கொள்க பிரானிருந்த கோலமே.


ஒளியதான காசிமீது வந்ததங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விசுவநாத னானவன்
தெளியுமங்கை உடனிருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமவிந்த நாமமே.


விழியினோடு புனல்விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவுநின்றது இல்லையே
வெளிபரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும்
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே.


ஓம்நமசி வாயமே உணர்ந்மெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே.


அல்லல்வாசல் ஒன்பது மறுத்தடைந்த வாசலும்
சொல்லுவாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.


ஆதியானது ஒன்றுமே அனேகஅனேக ரூபமாய்
சாதிபேத மாய்எழுந்து சர்வசீவ னானபின்
ஆவியோடு ஆடுகின்ற மீண்டுமந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்குச் சுத்தமாய் இருப்பரே.


மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந்து அடுத்ததும் விடுத்ததும்
புலன்கள்ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்றமாயம் என்னமாய ஈசனே.


பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன்தெரிந்த ஞானியே.


மண்கிடார மேசுமந்து மலையுளேறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலுமென்று கூறுகிறீர்
தம்பிரானை நாள்கடோறுந் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே.


நாவிதூ ளழிந்ததும் நலங்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரமுங் குறைந்ததும்
பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்கினால் ஐவரும் அடங்குவார்.


வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமா
மாடுமக்கள் பெண்டீர்சுற்றம் என்றிருக்கு மாந்தர்காள்
நாடுபெற்ற நண்பர்கையில் ஓலைவந்து அழைத்தபோது
ஆடுபெற்ற தவ்விலை பெறாதுகாணும் இவ்வுடல்.


இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ
இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டும் ஒன்றிநின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.


காரகார காரகார காவலூழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களேழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராமவென்னும் நாமமே.


நீடுபாரி லேபிறந்து நேயமான மாயந்தான்
வீடுபேரிதென்றபோது வேண்டியின்பம் வேண்டுமோ
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடுராம ராமராம ராமவென்னும் நாமமே.


உயிரு நன்மையால் உடலெடுத்து வந்திருந்திடும்
உயிர்உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாய்கையாகிஒன்றைஒன்றுக் கொன்றிடும்
உயிரும்சத்தி மாய்கையாகி ஒன்றையொன்று தின்னுமே.


நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தவல்லி யோனியும்
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படான் நம்ஈசனே.


விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே.


விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே.


மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாலுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை உண்மையே.


மின்னெழுந்து மின்பரந்து மின்னொடுங்கும் வாறுபோல்
என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுளேஅடங்குமே
கண்ணுள்நின்ற கண்ணில்நேர்மை கண்ணறிவி லாமையால்
என்னுள்நின்ற என்னையன்றி யானறிந்த தில்லையே.


இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அகண்டம் ஏழகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே.


ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே
ஆகிலும் அழகிலும் அதன்கணேயம் ஆனபின்
சாதிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே.


வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கி நீரதாய்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்துபூசை பண்ணினால்
காதில்நின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
அதிஅந்த மும்கடந்தது அரியவீட தாகுமே.


பருத்திநூல் முறுக்கிவிட்டு பஞ்சிஓதும் மாந்தரே
துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம்நீங்க வல்லிரேல்
கருத்தில்நூல் கலைபடும் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கரவறும் சிவாயஅஞ் செழுத்துமே.


சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர்கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.


காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.


எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.


அறையறை இடைக்கிட அன்றுதூமை என்கிறீர்
முறையறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை என்கிறீர்
துறையறிந்த நீர்குளித்தால் அன்றுதூமை என்கிறீர்
பொறையிலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே.


சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே
சுத்தமேது கட்டதேது தூய்மைகண்டு நின்றதேது
பித்தகாயம் உற்றதேது பேதமேது போதமே.


மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது
நாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா
வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா.


தூமையற்று நின்றலோ சுதீபமற்று நின்றது
ஆண்மையற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
ஆண்மையற்று ஆண்மையற்றுசஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லுமற்று நின்றதே.


ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்க ளாவன
சீறுகின்ற மூடனேஅத் தூமைநின்ற கோலமே.


தூமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமையெங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்துலகங்கண்டதே
தூமைதானும் ஆசையாய்த் துறந்திருந்த சீவனை
தூமையற்று கொண்டிருந்த தேசமேது தேசமே.


வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்
வேணுமென்று தேடினாலும் உள்ளதல்ல தில்லையே
வேணும்என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாண லாகுமே.


சிட்டர்ஓது வேதமும் சிறந்தஆக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்.


நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாளிருந்தும் ஓதினால் அதன்பயன்
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்திலோர் எழுத்துமாய்
ஏறு சீரெழுத்தையோத ஈசன்வந்து பேசுமோ.


காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்
மாலைகாலை யாய்ச்சிவந்த மாயமேது செப்பிடீர்
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகிநின்ற காலனில்லை இல்லையே.


எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து
இட்டமண்டலத்திலே எண்ணியாறு மண்டலம்
தொட்டமண்டலத்திலே தோன்றிமூன்று மண்டலம்
நட்டமண்டலத்திலே நாதன்ஆடி நின்றதே.


நாலிரண்டு மண்டலத்துள் நாதனின்றது எவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்
சேரிரண்டு கண்கலந்து திசைகளெட்டு மூடியே
மேலிரண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே.


அம்மையப்பன் அப்புநீ ரறிந்ததே அறிகிலீர்
அம்மையப்ன் அப்புநீ ரரியய ன்அரனுமாய்
அம்மையப்பன் அப்புநீ ராதியாதி ஆனபின்
அம்மையப்பன் அன்னையன்றி யாருமில்லை ஆனதே.


உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப் பதற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே.


ஆதியுண்டு அந்தமில்லை அன்றிநாலு வேதமில்லை
சோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்தது ஏதுமில்லை
ஆதியானமூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் ஆரறிவது அண்ணலே.


புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே.


உதிரமான பால்குடித் தொக்கநீர் வளர்ந்ததும்
இரதமாய் இருந்ததொன் றிரண்டுபட்ட தென்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப் புலாலதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே.





Meta Information:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar