பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinatharமுதல்வன் முறையீடு( கன்னி வனநாதா )

கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ!
தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ!


அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ!
திருநயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ!


செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ!
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ!


முல்லை நிலவெறிக்கும் மூரல்ஒளி பாரேனோ!
அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ!


மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ!
சிகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ!


கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ!
பொங்கு அரவைத் தான்சடையில் பூண்டவிதம் பாரேனோ!


சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ!
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ!


கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ!
அக்கினியை ஏந்திநின்ற ஆனந்தம் பாரேனோ!


தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ!
தாக்கும் முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ!


வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ!
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ


அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ!


சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ!
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ!
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)


கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா!
பட்டநாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ!


நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ?
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ?


வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ?


வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ?
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ?


ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ?
ஊனம்அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ?


என்னென்று சொல்லுவண்டா? என்குருவே! கேளேடா!
பின்னை எனக்குநீ யல்லாமல் பிறிதிலையே.
(கலை வனநாதா! - கன்னி வனநாதா)


அன்ன விசாரமது அற்ற இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?


உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ?


ஒப்புவமை பற்றோடு ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ


வாக்கு மனாதீத அகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள்குருவே! நின் தாள் இணைக்கே யான் போற்றி!


அருள் புலம்பல்

ஐங்கரனைத் தெண்டனிட்டேன் அருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்து ஒருவன் தன் சொரூபம் காட்டிஎனை


கொள்ளைப் பிறப்பு அறுக்கக் கொண்டான் குருவடிவம்;
கள்ளப் புலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி!


ஆதாரம் ஓராறும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதான கோட்டை எல்லாம் சுட்டான் துரிசு அறவே!


மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
தத்துவங்கள் எல்லாம் தலைகெட்டு வெந்ததடி!


என்னோடு உடன் பிறந்தார் எல்லாரும் பட்டார்கள்;
தன்னம் தனியே தனித்திருக்க மாட்டேண்டி!


எல்லாரும் பட்டகளம் என்று தொலையுமடி
சொல்லி அழுதால் துயரம் எனக்கு ஆறுமடி!


மண்முதலாம் ஐம்பூதம் மாண்டு விழக் கண்டேண்டி!
விண்முதலாம் ஐம்பொறிகள் வெந்துவிழக் கண்டேண்டி!


நீங்காப் புலன்கள் ஐந்தும் நீறாக வெந்ததடி;
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழக் கண்டேண்டி!


மனக்கரணம் அத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரணத் தோடே எரிந்துவிழக் கண்டேண்டி!


ஆத்தும தத்துவங்கள் அடுக்கு அழிய வெந்ததடி!
போற்றும் வகை எப்படியோ போதம் இழந்தானை?


வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி
சுத்தவித்தை ஐந்தினையும் துரிசு அறவே.


மூன்று வகைக் கிளையும் முப்பத்து அறுவரையும்
கான்றுவிழச் சுட்டுக் கருவேர் அறுத்தாண்டி!


குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ


கேடுவரும் என்றறியேன்; கெடுமதிகண் தோற்றாமல்
பாடுவரும் என்றறியேன்; பதியாண்டு இருந்தேண்டி;


எல்லாரும் பட்டகளம் இன்ன இடம் என்றறியேன்;
பொல்லாங்கு, தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி!


உட்கோட்டைக் குள்ளிருந்தார் ஒக்க மடிந்தார்கள்;
அக்கோட்டைக் குள்ளிருந்தார் அறுபது பேர் பட்டார்கள்.


ஒக்க மடிந்ததடி! ஊடுருவ வெந்ததடி!
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி!


தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசு அறவே;
கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி!


ஓங்காரம் கெட்டதடி! உள்ளதெல்லாம் போச்சுதடி!
ஆங்காரம் கெட்டதடி! அடியோடு அறுத்தாண்டி!


தரையாம் குடிலை முதல் தட்டுருவ வெந்ததடி!
இரையும் மனத்து இடும்பை எல்லாம் அறுத்தாண்டி!


முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி!
தன்னை அறியவே தான் ஒருத்தி யானேண்டி!


என்னையே நான் அறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியத் தலம் எனக்குச் சொன்னாண்டி!


தன்னை அறிந்தேண்டி! தனக்குமரி ஆனேண்டி!
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?


வீட்டில் ஒருவரில்லை வெட்ட வெளி ஆனேண்டி!
காட்டுக்கு எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்


நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ?
பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக்கு ஏச்சலவோ?


இந்நிலைமை கண்டாண்டி! எங்கும் இருந்தாண்டி!
கன்னி அழித்தாண்டி! கற்பைக் குலைத்தாண்டி.


கற்புக் குலைத்தமையும், கருவோ அறுத்தமையும்,
பொற்புக் குலைத்தமையும், போதம் இழந்தமையும்.


என்ன வினைவருமோ! இன்னம் எனக்கு என்றறியேன்!
சொன்ன சொல் எல்லாம் பலித்ததடி! சோர்வறவே.