பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



திருவொற்றியூர்

ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் - கடு அருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி !


வாவிஎல்லாம் தீர்த்த(ம்) மணல் எல்லாம் வெண்ணீறு
காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றியூர் !


திருவாரூர்

ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் - நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.


எருவாய்க்கு இருவி ரல்மேல் ஏறுண்டிருக்கும்
கருவாய்கோ கண்கலங்கப் பட்டாய் - திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ


திருக்காஞ்சி

எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம்
எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ?


திருக்கச்சிக்காரோணம்

அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும்
சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா - மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப்பற்றி
இசிக்குதையா காரோண ரே.


திருக்காளத்தி

பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் - வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?


திருவிருப்பையூர்

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா


திருவையாறு

மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா


திருக்குற்றாலம்

காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !


பொது

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே - நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்


தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிரு - நாடி நீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன் நான்
உன்னை நினைத்தால் உதை.


வாசற் படிகடந்து வாராத பிச்சைக்குஇங்
காசைப் படுவதில்லை அண்ணலே - ஆசைதனைப்
பட்டிருந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.


நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலே தான் அங் கிருப்பதுவும் - பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே
தூங்குவம் தானே சுகம்.


இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் - பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.


விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு)
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.


ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.


வெட்ட வெளியான வெளிக்கும் தெரியாது
கட்டளையும் கைப்பணமும் காணதே - இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது பாவியே நெஞ்சில் அவன்
இற்றெனவே வைத்த இனிப்பு


இப்பிறப்பை நம்பி இருப்பாரோ ? நெஞ்சமே
வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம்போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.


மேலும் இருக்க விரும்பினையே வெளிவிடையோன்
சீலம் அறிந்திலையே சிந்தையே கால்கைக்குக்
கொட்டை இட்டு மெத்தை இட்டுக் குத்திமொத்தப் பட்ட உடல்
கட்டை இட்டுச் சுட்டுவிடக் கண்டு


ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு.


இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை - முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு !


முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும் அம்மட்டோ இம்மட்டோ ?
நாம்பூமி வாழ்ந்த நலம்.


எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம் இவை ?
அத்தனையும் மண்திண்ப தல்லவோ ? - வித்தகனார்
காலைப் பிடித்து மெள்ளக் கங்குல்பகல் அற்ற இடத்தே
மேலைக் குடியிருப்போ மே !


எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர்
எச்சில் இருக்கும் இடம் அறியீர் - எச்சில்தனை
உய்த்திருந்து பார்த்தால் ஒருமை வெளிப்படும் பின்
சித்த நிராமயமா மே.


எத்தனை பேர் நட்டகுழி ? எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் ? நித்தநித்தம்
பொய்யடா பேசும் புவியில்மட மாதரைவிட்டு
உய்யடா உய்யடா உய் !


இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !


எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ - வித்தகமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான் !


மாலைப் பொழுதில்நறு மஞ்சள் அரைத் தேகுளித்து
வேலை மினுக்கிட்டு விழித்திருந்து - சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின் ?


வான்றேடு மறையேயோ மறைதேடும் பொருளையோ
ஊன்றேடும் உயிரேயோ உயிர்தேடும் உணர்வேயோ
தான்தேட நான்தேடச் சகலமெலாம் தனைத்தேட
நான்தேடி நான்காண நானாரோ நானாரோ.


நாப்பிளக்கப் பொய் உரைத்துநவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே !


மத்தளை தயிர்உண்டானும் மலர்மிசை மன்னி னானும்
நித்தமும் தேடிக் காணா நிமலனே நீஇன் றேகிச்
செய்தகளை கயல்பாய நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டு ளானே !


வடிவந்தானும் வாலிபம் மகளும் தாயும் மாமியும்
படிகொண்டாரும் ஊரிலே பழிகொண்டால் நீதியோ
குடிவந்தானும் ஏழையோ ? குயவன் தானும் கூழையோ ?
நடுநின்றானும் வீணனோ ? நகரம் சூறை ஆனதே.


மண்ணும் உருகும் மரம் உருகும் மாயை உருகும் மால்உருகும்
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேத வகை உருகும்
அண்ணல் உருகும் இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் அரவணையான்
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே.





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar