அழுகணிச் சித்தர் பாடல்



மெய்ஞ்ஞானம்

பண்டிவனை நானறியேன் பலகாலம் வந்தான்டி
அண்டி இருந்தான்டி - என் ஆத்தாளே
ஆகலத்தில் வைத்தான்டி.

பத்தினியாய் என்நாளும் பாடறிந்து சூடாமல்
மத்தியா னத்தில் என்னை - என் ஆத்தாளே
வாசிரிக்கச் சொன்னான்டி.

வாடைதனைக் காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல்
ஆடை குலைத்து எமையும் - என் ஆத்தாளே
அலங்கோலஞ் செய்தான்டி.

கற்புக் கரசிஎன்ற காரப்பேர் விட்டுஅகலப்
பொற்புக் குலைத்து எமையும் - என் ஆத்தாளே
போதம் இழந்தனடி.

என்ன வினைவருமோ இன்னதெனக்கு என்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் - என் ஆத்தாளே
சொல்லறவே வெந்ததடி.

கங்குல்பகல் அற்றிடத்தே காட்டிக் கொடுத்தான்டி
பங்கம் அழித்தான்டி - என் ஆத்தாளே
பாதகனைப் பார்த்திருந்தேன்.

ஓதியுணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி
சாதியில் கூட்டுவரோ - என் ஆத்தாளே
சமையத்தாற் குள்ளாமோ.

என்னகுற்றஞ் செய்தேனோ எல்லவருங் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம் - என் ஆத்தாளே
அறியாரோ அம்புவியில்.

பொய்யான வாழ்வெனக்குப் போதமெனக் கண்டேன்டி
மெய்யான வாழ்வெனக்கு - என் ஆத்தாளே
வெறும்பாழாய் விட்டுதடி.

சொல்லானைச் சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையென்று
எல்லாருங் கண்டிருந்தும் - என் ஆத்தாளே
இப்போது அறியார்கள்.

கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேன்டி
உன்மாயம் இட்டவனை - என் ஆத்தாளே
உருவழியக் கண்டேன்டி.

என்னசெய்யப் போறேன்நான் இருந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு - என் ஆத்தாளே
காரணமாய்க் காய்த்ததடி.

அந்தவிடம் அத்தனையும் அருளாய் இருந்துதடி
சொந்தம் இடமெல்லாம் - என் ஆத்தாளே
சுகமாய் மணக்குதடி.

இந்தமணம் எங்கும் இயற்கைமணம் என்றறிந்து
அந்தச் சுகாதீதம் - என் ஆத்தாளே
அருட்கடலில் மூழ்கினன்டி.

அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்திசிவம் என்றறிந்தே - என் ஆத்தாளே
சச்சுபலங் கொண்டான்டி.

உள்ளத்தொளி யாகவடி ஓங்காரத்து உள்ளிருக்கும்
கள்ளப் புலன் அறுக்க - என் ஆத்தாளே
காரணமாய் வந்தான்டி.

கணக்கனார் வாசலது கதவுதான் தாள்திறந்து
பிணக்காத பிள்ளையென்று - என் ஆத்தாளே
பீடமிடம் பெற்றேன்டி.

மூன்று சுழிவழியே முன்னங்கால் தான்மடித்து
ஈன்று சுழிவழியே - என் ஆத்தாளே
இசைந்திருந்த மந்திரமும்.

தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே
மூன்றுவழி போகவடி - என் ஆத்தாளே
முதியமன ஆச்சுதடி.

சுத்த மத்தமற்றே தொண்டராய்த் தொண்டருடன்
அத்திவித்தின் போலே - என் ஆத்தாளே
அதிகம் அளித்தேன்டி.

வித்துருவத் தோடே விநாயகனைத் தாள்தொழுது
அத்துருவம் நீக்கிபடி - என் ஆத்தாளே
அறிய அளித்தேன்டி.

மின்னார் விளக்கொளிபோல் மேவுமிதே யாமாகில்
என்னாலே சொல்லவென்றால் - என் ஆத்தாளே
எழும்புதில்லை என் நாவு.

அரூபமாய் நின்றானை அகண்டபரி பூரணத்தைச்
சொரூபமாய் நின்றிடத்தே - என் ஆத்தாளே
தோன்றிற்றுத் தோன்றுமடி.

அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும்
சட்சமையம் ஆனதுவும் - என் ஆத்தாளே
தணலாக வெந்ததடி.

சமையஞ் சமையமென்பார் தன்னைஅறியாதார்
நிமைக்குள் உளுபாயமென்பார் - என் ஆத்தாளே
நிலமை அறியாதார்.

கோத்திரம் கோத்திரமென்பார் குருவை அறியாதார்
தோத்திரஞ் செய்வோமென்பார் - என் ஆத்தாளே
சொரூபம் அறியாதார்.

உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி
பெற்றார் இணக்கமடி - என் ஆத்தாளே
பேரில் பிணக்கமடி.

தேய்ந்த இடத்திருக்கச் சிந்தைஅறியுமனம்
ஆய்ந்த இடமெல்லாம் - என் ஆத்தாளே
அவசமனம் வீசுதடி.

பேதிச்சு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி
சாதிஇவன் அன்றெனவே - என் ஆத்தாளே
சமையத்தார் ஏசுவரே.

நல்லோ ருடன்கூடி நாடறிய வந்ததெல்லாம்
சொல்லவாய் உள்ளவர்கள் - என் ஆத்தாளே
சொல்லி நகைப்பாரோ.

இன்பமுற்று வாழ்ந்ததடி என்மாயம் ஆச்சுதடி
தம்பறத் தள்ளிவிடி - என் ஆத்தாளே
தனம்போன மாயமடி.

வல்லான் வகுத்தவழி வகையறிய மாட்டாமல்
இல்லான் இருந்தவழி - என் ஆத்தாளே
இடம் அறியாது ஆனேன்டி.

கல்லாலே வேலிகட்டி கனமேல் ஒளிவுகட்டி
மல்லால் வெளிபுகட்டி - என் ஆத்தாளே
மலவாசல் மாண்டுதடி.

ஆசாபாசம் அறியா தன்பு பொருந்தினபேர்
ஏசாரோ கண்டவர்கள் - என் ஆத்தாளே
எவரும் நகையாரோ

இன்பமுற்ற பேர்கடனை எல்லோரும் பேசுவரோ
துன்பமுற்ற பேர்கடனை - என் ஆத்தாளே
சொல்லி நகையாரோ

விண்ணைஎட்டிப் பாராமல் விதத்தை உற்றுப்பாராமல்
மண்ணையெட்டிப் பார்த்தொருவர் - என் ஆத்தாளே
வலுப்பேசி ஏசுவரோ.

என்னையிவன் கொண்டான்டி இருவினையும் கண்டான்டி
சன்னைசொல்ல விண்டான்டி - என் ஆத்தாளே
சமையம்பிணக் கானேன்டி.

இந்நிலத்திற் கண்காண ஏகாத மானிடத்தே
கன்னி அழித்தாண்ட - என் ஆத்தாளே
கற்பைக் குலைத்தாண்டி.

சுத்தத்தார் பார்த்திருக்கச் சூதுபலபேசிப்
பத்தாவாய் வந்திருந்தான் - என் ஆத்தாளே
பாசமதைத் தாண்டி.

அண்டத்தைக் கட்டியடி ஆசையறுத்தான்டி
தொண்டராய்த் தொண்டருக்கு - என் ஆத்தாளே
தோற்றம் ஒடுக்கமடி.

கற்பனையும் மூன்றுவிதம் காரமாய்க் கொண்டேன்டி
ஒப்பனையும் அல்லவடி - என் ஆத்தாளே
ஒடுக்கம் அறியேன்டி.

பாருக்குள் மாயையடி பார்க்கவெள்ளை பூத்ததடி
மேருக்குள் வெண்ணெய்யைப்போல் - என் ஆத்தாளே
முழங்கிக் கலந்திடவே.

உண்மைப் பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு
விண்ணிலே போச்சுதடி - என் ஆத்தாளே
வெகுபேரைப் பார்த்திருந்தேன்.

இரும்பில்உறை நீர்போல் எனவிழுங்கிக் கொண்டான்டி
அரும்பில் உறை வாசமும்போல் - என் ஆத்தாளே
அன்றே இருந்தாண்டி.

அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டதுபோல்
மக்கனப் பட்டுள்ளே - என் ஆத்தாளே
மருவி இருந்தான்டி.

கங்குகரை இல்லான்டி கரைகாணாக் கப்பலடி
எங்கும்அள வில்லான்டி - என் ஆத்தாளே
ஏகமாய் நின்றான்டி.

தீவரம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயங்காண்
பாவகம் ஒன் றில்லான்டி - என் ஆத்தாளே
பார்த்திட எல்லாம்பரங்காண்.

உள்ளுக்குள் உள்ளான்டி ஊருமில்லான் பேருமில்லான்
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
காரணமாய் வந்தான்டி.

அப்பிறப்புக் கெல்லாம் அருளா அமர்ந்தான்காண்
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் - என் ஆத்தாளே
மேவி இருந்தான்டி.

நீரொளிபோல் எங்கும் நிறைந்த நிராமயங்காண்
பாரொளிபோல் எங்கும் - என் ஆத்தாளே
பரந்த பராபரன்காண்.




Meta Information:
kaduveli Couplet,அழுகணிச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,azhkkani padalgal in tamil lyrics,devotional songs,Poet azhkkani siddhar,azhkkanich siddhar