அழுகணிச் சித்தர் பாடல்
TAGS:
azhkkani Couplet,அழுகணிச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,azhkkani padalgal in tamil lyrics,devotional songs,Poet azhkkani siddhar,azhkkanich siddharவாத கற்பம்

கற்பூரச் சுண்ணமடி - ஆத்தாளே
கடுங்காரச் சுண்ணமடி
வெற்பாக வைத்தானே - ஆத்தாளே
வேதைகவர் கோடியடி.

எண்ணெண் சரக்குமடி - ஆத்தாளே
இப்பூரச் சுண்ணமடி
கண்ணத்தில் வீரர்
கசதில் சுண்ணாம்பாம்.

அக்காரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
ஆகரெண்டு சுண்ணமதை
உக்காரம் மேற்பூசி - ஆத்தாளே
உலையிலே வைத்தூத.

எண்ணெய் எல்லாம் போக்குமடி
இருக்கும் சவுக்காரம்
சுண்ணமடி மேற்கவசம் - ஆத்தாளே
சொல்லுகிறேன் அப்புச்சுண்ணம்.

கற்பூரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
கலந்திருந்த இண்டு மடி
செப்பமுள்ள செயநீரால் - ஆத்தாளே
சேர்த்தாட்டி வீரமிட்டு.

வழமலைக்கு - ஆத்தாளே
வளமாய்ப் பொதிந்தபின்பு
தழலிலே தானாட்டி - ஆத்தாளே
சற்குருவாம் உப்பாலே.

உப்புச் சுண்ணங் கற்பூரம் - ஆத்தாளே
உண்மை சவுக்காரம்
செப்பமுடன் மூன்றுசுண்ணம் - ஆத்தாளே
சேர்த்துரவியில் இட்டு.

இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே
எடுத்துத் துருசில் இட்டு
முக்கியமுடன் மேற்கவசம் - ஆத்தாளே
முன்பூசி வெயிலில் வைக்க.

சுண்ணாம்பு தங்கியிது - ஆத்தாளே
துடிதாளகம் வெளுக்கும்
சுண்ணாம்பு வங்கமடி - ஆத்தாளே
துடிலிங்கம் கைமாட்டும்.

சாதிலிங்கச் சுண்ணாம்பு - ஆத்தாளே
தனிலோகச் சுண்ணாம்பாம்
நாதாந்தச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
நாகமிதிற் சுண்ணாம்பாம்.

சுண்ணாந்தா னாகவடி - ஆத்தாளே
துடிகெந்த கம்வெளுப்பாம்
சுண்ணாம்பாங் கெந்தகந்தான் - ஆத்தாளே
துடியானை பட்டுவிடும்.

சூதனடி பட்டாண்டி - ஆத்தாளே
சூழ்ந்து அங்கந் தான்சேர்க்க
வேதை சவ்வீரனடி - ஆத்தாளே
மீறும்வகை மூன்றுமொன்றாய்.

சேர்ந்திருக்க வேமணியாம் - ஆத்தாளே
செம்புவெள்ளி சேர்ந்தேதான்
நூத்துக்கொரு மாவிடவே - ஆத்தாளே
நூத்தெட்டு மாத்தாகும்.

இத்தங்கம் செந்தூரம் - ஆத்தாளே
இந்த மணியாலே
சத்தபேதி யாகுமடி - ஆத்தாளே
தான்பரிச பேதியிதாம்.

மண்டலம் பேதிக்குமடி - ஆத்தாளே
மலையும் பழுக்குமடி
அண்டத்தை தொட்டாட்ட - ஆத்தாளே
அடங்காப் பொருளாகும்.

மண்ணேது கல்லேது - ஆத்தாளே
மரமேது இவ்வேதை
ஒண்ணாது வொண்ணாது - ஆத்தாளே
ஒடுங்கும் பொருளைப்பேண்.

தாளகம் வெள்ளியிலே - ஆத்தாளே
தப்பாது பத்தரையும்
பாளித்த லோகச்சுண்ணம் - ஆத்தாளே
பத்தரையாம் வங்கமதில்.

வீரச்சுண்ணம் வெள்ளியதாம் - ஆத்தாளே
வெள்ளிபதி னெட்டாகும்
பூரச்சுண்ணஞ் சேர்க்கவடி - ஆத்தாளே
பொன்வயதோ எண்ணான்காம்.

சிலபற்பம் செம்பினிலே - ஆத்தாளே
சேர்க்கவய எட்டரையாம்
துலையாக் கவர்கோடி - ஆத்தாளே
சொன்னார் திருமூலர்.

பார்த்தேனடி கண்டேனடி - ஆத்தாளே
பாசங் குருபாதம்
காத்தேனடி கண்டேனடி - ஆத்தாளே
கைமுறையாம் என்னூல்தான்.

கருவை ஒளியாமல் - ஆத்தாளே
காசினியில் உள்ளோர்க்குக்
குருவைநாம் காண்பித்தோம் - ஆத்தாளே
குணமான வாதவித்தை.

உண்டென்ற பேர்க்குமடி - ஆத்தாளே
உண்டாய் இருக்குமடி
சண்டாளன் ஆனாக்கால் - ஆத்தாளே
தான்லபிக்க மாட்டாதே.

லபிக்க வழி சொல்லுகிறேன் - ஆத்தாளே
நந்திதிரு மூலரையும்
லபிக்கக் கா லாங்கியையும் - ஆத்தாளே
நாதாந்தப் போகரையும்.

சத்தி சிதம்பரமும் - ஆத்தாளே
சட்டைமுனி பூசைசெய்வாய்
உத்தமக் கொங்கணரை - ஆத்தாளே
உசிதமாய்ப் பூசைசெய்வாய்.

கருவூரா னானந்தர் - ஆத்தாளே
கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் - ஆத்தாளே
உண்மையுடன் பூசைசெய்.

சண்டாளன் ஆனாலும் - ஆத்தாளே
தான்வேதை காண்பானே
கண்டசெய்தி சொன்னோன்நான் - ஆத்தாளே
கற்பவகை சொல்லுபவனே.

சொல்லுகிறேன் கரிப்பான் - ஆத்தாளே
சுத்த இலைபரித்துச்
செல்லும் பழச்சாற்றில் - ஆத்தாளே
செம்பழத் தளவரைத்து.

அரைத்தாவின் நெய்யதனில் - ஆத்தாளே
அதுசிவக்கக் காய்ந்த
திரமாயோர் பீங்கானில் - ஆத்தாளே
செப்பமுடன் வைத்தேதான்.

பதனமாய் வண்டுகட்டி - ஆத்தாளே
பரமென்று நம்பியேதான்
திதிபூரு வந்தனிலே - ஆத்தாளே
செயல்பொருந்தும் நாள்பார்த்தும்.

அமுதயோ கம்பார்த்து - ஆத்தாளே
ஆனதொரு கற்பதைக்
குமுதவொலி உண்ணாக்கில் - ஆத்தாளே
குலாவுகின்ற வாசலிலே.

பெருவிரலால் அதைத்தொட்டு - ஆத்தாளே
பேதைமனம் எண்ணாமல்
ஒரு நெறியாய் நாலுதரம் - ஆத்தாளே
உயரவலம் சுற்றிடவே.

நாலுதரம் சுத்திசெய்தால் - ஆத்தாளே
நன்றாய் அகக்கதவில்
ஆலமுண்டோன் தன்னாணை - ஆத்தாளே
அஞ்சுகத வுந்திறக்க.

நாற்பதுநாள் கொள்வாரேல் - ஆத்தாளே
நற்கதவு ஐஞ்சுந் திறக்கும்
தீர்க்கமதாய் சித்தியுண்டாம் - ஆத்தாளே
தேகம் வச்ரகாயமதாம்.

மறவாமற் கற்பவகை - ஆத்தாளே
மனசாரத் தின்றுவிட்டால்
இறவாமல் அட்டசித்தி - ஆத்தாளே
இக்கற்பங்கொண்ட பின்பு.

உற்றதொரு கற்பமதை - ஆத்தாளே
உணவாகத் தின்றுவிட்டால்
செத்திறந்து போவதில்லை - ஆத்தாளே
திடமா யிருக்குமடி.

கெதிபெற வேணுமென்றால் - ஆத்தாளே
கேளாம லேகேட்டு
மதியமுதம் கொண்டபின்பு - ஆத்தாளே
மறுகற்பம் கொண்டிடுவாய்.

வேதாள கற்பமதை - ஆத்தாளே
விதுவளரும் அட்டமிநாள்
மாதாவிம் மூலிகைக்கு - ஆத்தாளே
மயமாய்நெய் வேத்யமிட்டு.

நமக்கரித்துத் தரம்நோக்கி - ஆத்தாளே
நயமாக வாங்கிவந்த
நமக்கார சித்தியுடன் - ஆத்தாளே
நன்றாய் நிழலுலர்த்தி.

சூரணஞ் செய்தேதான் - ஆத்தாளே
சுயமான நாள்பார்த்து
மீரும் வெருகடியாய் - ஆத்தாளே
வேண்டுந்தேன் நெய்சேர்த்து.

கொள்ளவே மண்டலந்தான் - ஆத்தாளே
கூறுமட்ட சித்தியுண்டாம்
தெள்ளும் அவர்களுக்கு - ஆத்தாளே
தேவ வருடமதில்.

பதினா யிரவருடம் - ஆத்தாளே
பண்பாய் இருப்பனடி
ரதிவேதப் பெண்முதலாய் - ஆத்தாளே
நன்மையுடன் மேவுவர் பார்.

பூலோக மாதர்களை - ஆத்தாளே
புகலவே ஆகாது
மேலோகப் பெண்கள்சித்தி - ஆத்தாளே
மேவுதற்குந் தானாகும்.

கையான்சங் காயளவு - ஆத்தாளே
கறிமிளக திற்பாதி
செய்யாதி மண்டலமே - ஆத்தாளே
தின்றால் நரைகளில்லை.

திரையில்லை அட்டசித்தி - ஆத்தாளே
தேகமது எவ்வர்ணமாய்
வரைவச்ர காயமதாம் - ஆத்தாளே
வயதுமுந் நூறிருப்பன்.

கொடுப்பையிலை லேசாக - ஆத்தாளே
கொள்வாயோர் மண்டலமே
நடுக்கமில்லை தான் பகலில் - ஆத்தாளே
நட்சத் திரந்தோன்றும்.

பத்தியம் பச்சரிசி - ஆத்தாளே
பாலிட்ட சோறாகும்
மத்தொன்றும் ஆகாதே - ஆத்தாளே
வண்மையுடன் இக்கொடுப்பை.

சமூலம் கழுவிநன்றாய் - ஆத்தாளே
தயவாய் நிழல் உலர்த்தி
சமூலம் இடித்துநன்றாய் - ஆத்தாளே
சதிராகச் சூரணஞ்செய்.

பாலில் வெருகடியாய் - ஆத்தாளே
பதிமண்ட லம்கொளவே
மேலும் வச்ரகாயமடி - ஆத்தாளே
வேதையுமி நீராலே.

பழுக்கும் நவலோகம் - ஆத்தாளே
பரமட்ட சித்தியுண்டாம்
அழுக்கெடுத்து வெள்ளீயம் - ஆத்தாளே
அதில் ஈய நீர்வாங்கும்.

சித்திபெற்ற கற்பமடி - ஆத்தாளே
தேவ வருடமதில்
அத்தியின் தன்பிலமாய் - ஆத்தாளே
ஆயிரம் வயதிருப்பாய்.