பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » சொல்லதிகாரம்  » பெயரியல்

263.  மு சகம் நிழற்றும் முழு மதி மு குடை
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல் ஏ

264.  ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இரு திணை ஐம் பால் பொருள் ஐ உம் தன் ஐ உம்
மூ வகை இடத்து உம் வழக்கு ஒடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல் ஏ

265.  ஒருமொழி ஒரு பொருளன ஆம் தொடர்மொழி
பல பொருளன பொது இருமை உம் ஏற்பன

266.  மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ள உம் இல்ல உம் அஃறிணை

267.  ஆண் பெண் பலர் என மு பாற்று உயர்திணை

268.  ஒன்று ஏ பல என்று இரு பாற்று அஃறிணை

269.  பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமை உம் அஃறிணை அன்ன உம் ஆகும்

270.  படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின்
பெறப்படும் திணை பால் அனைத்து உம் ஏனை
இடத்து அவற்று ஒருமை பன்மை பால் ஏ

271.  தன்மை முன்னிலை படர்க்கை மூ இடன் ஏ

272.  இலக்கணம் உடையது இலக்கணப்போலி
மரூஉ என்று ஆகும் மூ வகை இயல்பு உம்
இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும் மு தகுதி ஓடு ஆறு ஆம் வழக்கு இயல்

273.  பல் வகை தாதுவின் உயிர் கு உடல் போல் பல
சொல் ஆல் பொருள் கு இடன் ஆக உணர்வின் இன்
வல்லோர் அணி பெற செய்வன செய்யுள்

274.  ஒன்று ஒழி பொது சொல் விகாரம் தகுதி
ஆகுபெயர் அன்மொழி வினைக்குறிப்பு ஏ
முதல் தொகை குறிப்பு ஓடு இன்ன பிற உம்
குறிப்பின் தரு மொழி அல்லன வெளிப்படை